"அ" "ஆ" முதல் "திருக்குறள்" வரை.. தமிழ் பேசி அசத்தும் சீன தொகுப்பாளினிகள்

0 630

உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான சீனத்தை தாய்மொழியாகக் கொண்ட சீன நாட்டு தமிழ் வானொலித் தொகுப்பாளினிகள், சரளமாக திருக்குறள் கூறும் திறன் , தயக்கமில்லா மேடைப்பேச்சு என செம்மொழியான தமிழ் மொழியில் அசத்துகின்றனர்....

இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்பின் முன்னோட்டமாக சீன வானொலியின் தமிழ் பிரிவு சார்பில் "சீன - இந்திய சந்திப்பு" என்கிற தலைப்பில் சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சீன வானொலியின் தமிழக நேயர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதில், சீனாவில் தமிழ் மொழிக்கு உள்ள வரவேற்பு, இருநாட்டு உறவின் முக்கியம்சங்கள், கலை மற்றும் கலாச்சார சிறப்பம்சங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. குறிப்பாக ,இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சீன வானொலியின் தமிழ் பிரிவில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாகிய சீனப் பெண்களான, பூங்கோதை, நிலானி,கலைமகள் உள்ளிட்டோருடைய தமிழ் பேச்சு பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து, நேயர்களுடைய வேண்டுகோளை ஏற்று, இல்லறவியல் மற்றும் பாயிரவியல் அகராதியில் இருந்து குறள்கள் கூறி அசத்தினார் வானொலி தொகுப்பாளர் நிலானி .

பண்பாட்டு தளத்தில் இந்தியா சீனா இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளதாகவும் அதனை சீன வானொலியின் தமிழ் பிரிவு வழியாகவும் , சமூகவலைதளங்கள் வழியாகவும் தெரியப்படுத்தி வருவதாகக் கூறிய கலைமகள் , வானொலி வழியாக மட்டுமில்லாமல் பல்வேறு தரப்பு தமிழக மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாட வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் எனக்கூறினார் .

இந்நிகழ்ச்சியின் இடையே தமிழக பாரம்பரிய கலைகளான பரதம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களின் பறையாட்டம் அரங்கேற்றப்பட்டது

சீனாவில் உள்ள இரண்டு பல்கலைக்கழகத்தில் தற்போது மொழிப்பாட பிரிவில் தமிழ் பயிற்றுவிக்கப் படுவதாகவும், சீன மாணவர்களும் தமிழ் மொழியை கற்க ஆர்வமாக உள்ளதாக கூறும் வானொலி தொகுப்பாளர் பூங்கோதை, தமிழ் மொழியின் மீதுள்ள காதலின் காரணமாகவே தங்களுடைய பெயர்களையும் தமிழில் மாற்றிக்கொண்டதாக பெருமிதம் கொள்கிறார் .

நிகழ்ச்சியின் இறுதியாக , தமிழ் அகராதி மற்றும் கீழடி ஆய்வறிக்கை புத்தகமும் சீன வானொலி தொகுப்பாளர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாயிரம் ஆண்டு பழமையான தொன்மையான தமிழ் மொழியின் சிறப்பினை உணர்ந்து, “அ ஆ ” முதல் “திருக்குறள்” வரை தன்னார்வத்துடன் தமிழ்மொழியை கற்று அசத்தும் வானொலி தொகுப்பாளர்கள் நிலானி, கலைமகள் , பூங்கோதை போன்றவர்களிடம் இருந்து தாய்மொழியின் மதிப்பரியாமல் தமிழ்மொழி கற்பதையே தவிர்ப்பவர்கள் கற்க வேண்டிய பாடம் ஏராளம் என்பதே நிதர்சனம்....

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments