லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷை 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு

0 499

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த சுரேஷ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தான். அவனை 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த இரண்டாம் தேதி நள்ளிரவில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

கடைச் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 28 கிலோ நகைகளை அள்ளிச் சென்றனர். இந்தக் கொள்ளை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள திருச்சி காவல்துறை சார்பில் 7 தனிப்படைகளும், தஞ்சை போலீஸ் தரப்பில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.

திருவாரூரைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகனும், அவரது அக்காள் மகனான சுரேஷூம் தான் இந்தக் கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் என்பது, திருவாரூர் மாவட்டம் விளமல் அருகே வாகனச் சோதனையில் சிக்கிய மணிகண்டன் மூலம் அம்பலமானது.

அவனிடம் இருந்து லலிதா ஜூவல்லரி நகைக் கடைக்குச் சொந்தமான நான்கரை கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மணிகண்டனையும், சுரேஷின் தாய் கனகவல்லியையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சுரேஷ் மற்றும் முருகனின் உறவினர்கள் 20 பேரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், முருகனையும், சுரேஷையும் பிடிப்பதற்காக அண்டை மாநிலங்களுக்கு தனிப்படைகள் விரைந்தன.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள நீதிமன்றத்தில் சுரேஷ் சரண் அடைந்தான். அவனை 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை அடுத்து செங்கம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சின்னராஜ் தலைமையிலான போலீசார், திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments