உயிரோடு இருப்பவர்களுக்கு பேனர் வைக்க மீண்டும் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்

0 364

உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க தடை விதிப்பது குறித்து, அதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் அமர்வு பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

சென்னை பள்ளிக்கரணை பகுதியில், பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கி உயிரிழந்த  சுபஸ்ரீயின் தந்தை ரவி, தன் மகளின் மரணத்திற்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க அரசுக்கு உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், சட்ட விரோதமாக பேனர் வைப்பதை தடுக்காத காரணத்தாலும், பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும்தான், தனது மகளின் உயிரிழப்பு நேர்ந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், சட்டவிரோதமாக பேனர் வைப்பதை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில்  கோரியிருந்தார். இந்த மனு  நீதிபதிகள் வைத்தியநாதன், சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

சுபஸ்ரீ உயிரிழப்பு தொடர்பான வழக்கு வேறு அமர்வில் விசாரணையில் இருக்கும் நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறபிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, இந்த வழக்கை நீதிபதி சத்தியநாரயணன் அமர்வில் பட்டியலிட நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க தடை விதிப்பது தொடர்பாக நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பேனர் வைக்க அனுமதி கோரி விண்ணபிப்பவர்கள், அனுமதி அளிக்கும் அதிகாரிகள், அச்சிடுவோர் ஆகியோரின் ஆதார் விவரங்களை தெரிவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

இதனிடையே, பேனர் வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை, வரும் 15ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த 12 நாட்களாக சிறையில் இருக்கும் இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இல்ல திருமண விழாவுக்காக வாழ்த்து கூறி கட்சியினர் பேனர் வைத்ததாகவும், வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

கட்சியினர் பேனர் வைத்ததற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ள மனுதாரர்கள், முறையான விசாரணை நடத்தாமல் காவல்துறையினர் இயந்திரத்தனமான வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

விசாரணை பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில் தங்களை சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments