இந்திய-சீன மக்களிடையே நல்லுறவை வலுப்படுத்துவது குறித்தும் பேச்சு

0 457

வர்த்தகம், பாதுகாப்புத்துறை, இந்திய-சீன மக்களிடையே நல்லுறவை வலுப்படுத்துவது, உலக அரசியல் நிலவரம் குறித்து, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் இடையே உச்சிமாநாடு, சீனாவின் வூகான் ((Wuhan)) நகரில் கடந்த ஆண்டு ஏப்ரல் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் நடைபெற்றது.

எழில்மிகு ஏரியின் கரைகளில் நடந்தபடியும், தேநீர் அருந்திக் கொண்டேயும், படகில் சென்றபடியும் இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர். அதேபோன்ற பேச்சுவார்த்தை,  மாமல்லபுரம் நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

வூகான் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் எந்த அளவுக்கு செயல் வடிவம் பெற்றுள்ளன என்பது குறித்து இரு தலைவர்களும் ஆலோசிப்பார்கள் என்றும், அவற்றை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வகையில் சம்மந்தப்பட்ட தத்தமது நாட்டு குழுக்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

மோடியுடனான குழுவில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என்றும், சீன அதிபருடன் அந்நாட்டு அரசின் ஆலோசகர் வாங் யி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் யாங் ஜிசே உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புத்துறை உறவுகளை பொறுத்தவரை, பரஸ்பரம் நம்பிக்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து இருதரப்பும் ஆலோசிக்கும். அந்த வகையில் மோடி-ஜின்பிங் உச்சிமாநாட்டை தொடர்ந்து, தோவல் மற்றும் யாங் ஜிசே பங்கேற்கும் சிறப்பு பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறலாம் என்று சொல்லப்படுகிறது.

பேச்சுவார்த்தைகளின்போது தீவிரவாத பிரச்சனை முக்கியமாக இடம்பெறும் என்றாலும், காஷ்மீர் தொடர்பான எந்த விவகாரமும் இடம்பெறாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கன் அரசு உயரதிகாரிகளுக்கு இந்தியாவும் சீனாவும் பயிற்சி அளித்துவரும் நிலையில் அது விரிவுபடுத்தப்படும் என்றும், சீனா-இந்தியா பிளஸ் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இருதரப்பு உறவுகளின் தாக்கத்தை மூன்றாவது நாட்டுக்கும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது

.70 ஆண்டு தூதரக உறவுகளை இரு நாடுகளும் நிறைவு செய்ய உள்ள நிலையில், இந்திய-சீன மக்களுக்கு இடையேயான பிணைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கைகள், அதை கண்காணிப்பதற்கான உயர்நிலைக் குழுக்களை இரு நாடுகளும் அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-சீனா இடையேயான வர்த்தக பற்றாக்குறை பிரச்சனையை பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடி எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வூகான் பேச்சுவார்த்தைக்குப் பிறகு சீனாவில் ஒழுங்குமுறை அமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, இந்தியாவில் இருந்து புகையிலை, பாசுமதி அல்லாத அரிசி உள்ளிட்ட மேலும் சில வகை பொருட்கள் சீனச் சந்தையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவற்றின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கிறது.

இதற்கு தீர்வு காணுவதும் இந்தியாவின் நோக்கமாக உள்ளது. இதேபோல, மண்டல பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதால், சீனப் பொருட்கள் இந்தியச் சந்தையில் குவிக்கப்பட்டு விடாது என்ற உத்தரவாதத்தையும் இந்தியா கேட்டுப்பெறும். மண்டல பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தனியே அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments