மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு முதலமைச்சர் கடிதம்

0 297

மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகத்தின் விரிவான திட்ட அறிக்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்தி மத்திய நீர்வளத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடகத்தின் மேகதாது அணை திட்டம் காவிரி நடுவர்மன்றத்தின் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. எனவே இந்த திட்டம் தொடர்பாக கர்நாடகத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இதற்காக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 10ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதங்களை சுட்டிக்காட்டி மீண்டும் இரு மத்திய அமைச்சர்களுக்கும்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

முதலமைச்சர் எழுதியுள்ள கடிதங்களில், நீரை சேமித்து வைப்பதற்கும், காவிரி பாயும் மாநிலங்களுக்கு நீரை விநியோகிப்பதற்கும் காவிரி படுகைகளில் தற்போது அமைந்துள்ள நீர்தேக்க வசதிகள் போதுமானவை என காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதிசெய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் திட்டம் ஏற்க முடியாதது, தேவையற்றது என்பதோடு முற்றாக நிராகரிக்கப்பட வேண்டியது என அந்த கடிதங்களில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த திட்டங்களுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட பிற காவிரி படுகை மாநிலங்களின் இசைவை கர்நாடகம் பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கர்நாடகத்தின் மேகதாது திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதோடு, அம்மாநிலத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், மேகதாது திட்டம் தொடர்பான  வரைவு விதிகளோடு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் வரும் ஆற்றுப் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்டங்களுக்கான மதிப்பீட்டு வல்லுநர் குழுவை கர்நாடகம் மீண்டும் அணுகியிருப்பதாகவும் இதற்கு தமிழக அரசு கடும் ஆட்சேபத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான வரைவு விதிகள் அடங்கிய, கர்நாடகத்தின் விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். எனவே இந்த விவகாரத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, கர்நாடகத்தின் திட்டத்தை ஊக்குவிக்க வேண்டாம் என அறிவுறுத்துமாறு மத்திய நீர்வள அமைச்சரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேபோல, மேகதாது தொடர்பான கர்நாடகத்தின் விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்குமாறு வல்லுநர் குழுக்களுக்கு அறிவுறுத்துமாறு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments