இடைத்தேர்தல் தீவிர பிரச்சாரம்

0 327

நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் களைகட்டியுள்ளது. நாங்குநேரி தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று முன்னீர்பள்ளம் சென்ற அவருக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நடந்து சென்ற படி மக்களை சந்தித்த அவர் வாக்கு சேகரித்தார்.

இதைத் தொடர்ந்து திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், மக்களின் குறைகளைக் கேட்டார்.

பின்னர் பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சியில் குடிநீர் பிரச்சனைக்கு திட்டம் தீட்டி அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகத் தெரிவித்தார். 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் காணை குப்பம், வயலாமூர், கருங்காலிபட்டு, மாம்பழப்பட்டு, மல்லிகைபட்டு உள்ளிட்ட பகுதிகளில் திமுக முன்னாள் அமைச்சர் தாமோ. அன்பரசன் வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். 

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் முதலமைச்சர் நாராயணசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமாரை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்து வருகிறார். செந்தாமரை நகர், எழில் நகர் பகுதிகளில் வீடு வீடாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாராயணசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இந்த தேர்தலோடு புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, கட்சிகள் காணாமல் போய் விடும் என்றார்.

இதேபோல் புதுச்சேரி அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரியை ஆதரித்து என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். வெங்கட்டா நகரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட KTC நகர் பகுதியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்த அவர் அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவு கோரினார்.

விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வாக்கு சேகரித்தார். திறந்த வாகனத்தில் சென்றபடி நகர் பகுதிகளில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments