எண்ணங்கள் வண்ணங்களாகட்டும்..! இன்று உலக மனநல விழிப்புணர்வு நாள்

0 130

உலக மனநல நாள் இன்று கடைபிடிக்கப்படும் வேளையில், மன நலனை பேணிப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும், அதற்கான வழிமுறைகள் குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தி...

உலகம் முழுவதும் 45 கோடி பேர் மன நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் நான்கில் ஒருவர் மன நலக் கோளாறுகளால் பாதிக்கப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் உலகம் முழுவதும் சராசரியாக ஓராண்டில் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும், விநாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்வதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதி அன்று உலக மன நல நாள் கடைபிடிக்கப்படும் நிலையில், இன்றைய நாளின் கருப்பொருளாக தற்கொலை தடுப்பு உள்ளது.

நீண்ட கால சோகம், வேலையின்மை, ஏமாற்றம், ஏக்கம், தொடர் தோல்வி, அதிக மதுப் பழக்கம், எதிலும் பிடிப்பு இல்லாமல் இருப்பது ஆகியவை மன அழுத்தம் உருவாவதற்கான காரணங்களாக உள்ளன. ஒரு வயது குழந்தை முதல் 90 வயது பெரியவர் வரை, அனைத்து பருவத்தினருக்கும் மன நோய் ஏற்பட ஏகப்பட்ட காரணங்கள் உள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஒருவரின் சிந்தனையில், செயல்பாடுகளில், நடத்தை மற்றும் உணர்வுகளில், பிறரை விட வித்தியாசமோ, தீவிரமோ தெரிந்தால், அது மனநலப்பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சரிசெய்வது மிகவும் அவசியம் என்பது மருத்துவர்களின் ஆலோசனை. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு நேரம் செலவிடுதல், வெளியூர் சுற்றுப் பயணம் செல்லுதல், வண்ணம் தீட்டுதல், போன்றவை மூலம் மனநலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். 

உடலில் நோய் இல்லாமல் இருப்பது மட்டும் ஆரோக்கியமாகி விடாது. மனநலம், உடல் நலனை ஒரு சேரப் பெற்றிருக்கும் நபரை மட்டுமே ஆரோக்கியமானவராக கருதலாம் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. எனவே மனநலத்தை பேணுவோம்..எண்ணங்களை வண்ணங்களாக்குவோம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments