சீரியல் கில்லர் ஜோலி யார் ? 6 பேர் கொலை பின்னணி

0 481

கேரளாவில், ஆண் நண்பர்களை சந்திக்க தடையாக இருந்த கணவன் உள்பட 6 பேரை, ஒவ்வொருவராக சூப் மற்றும் சாப்பாட்டில் சயனைடு கலந்து கொலை செய்த போலி பேராசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். சொத்துக்கும், தவறான தொடர்புக்கும் ஆசைப்பட்டதால் சீரியல் கில்லரான விபரீத பெண் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி...

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கூடத்தாயி பகுதியை சேர்ந்த ராய்தாமஸ் எனபவரது மனைவி ஜோலி..! இவர் என்.ஐ.டி கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிவதாக கூறிவந்தார்.

கடந்த 2002 முதல் 2016 ஆண்டுக்கு உள்பட்ட 14 ஆண்டுகளில் ஜோலியின் கணவர் ராய்தாமஸ், மாமனார் டோம் தாமஸ், மாமியார் அன்னம்மா உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

கணவர் இறந்ததும் தான் காதலித்த ஷாஜி என்பவரை ஜோலி திருமணம் செய்து கொண்டார். கொல்லப்பட்டவர்களில் 2 வது கணவன் ஷாஜியின் மனைவி மற்றும் மகளும் அடங்குவர். இதன்பின்னர் குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் ஜோலி, தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார்.

அமெரிக்காவில் இருந்து ராய்தாமசின் அண்ணன் ரோஜோ சமீபத்தில் ஊருக்கு வந்தபோது குடும்ப சொத்துக்கள் அனைத்தும் ஜோலியின் பெயருக்கு உயில் எழுதப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தந்தை எழுதி கொடுத்த உயிலில் ஏற்பட்ட சந்தேகம், 6 பேரது மரணத்திலும் ஏற்பட்டது. ஆரோக்கியமாக இருந்தவர்கள் எப்படி அடுத்தடுத்து உயிரிழந்தனர் என்ற சந்தேகத்தால் வீட்டில் தண்ணீர் குடிக்க கூட பயமாக இருப்பதாகவும் தனது குடும்பத்தினர் 6 பேரின் சாவில் மர்மம் இருப்பாதாகவும் போலீசில் புகார் அளித்தார்.

கேரள காவல்துறையினரின் விசாரணையில் ஜோலி தனது கணவன் உள்பட 6 பேரையும் சாப்பாடு மற்றும் சூப்பில் சயனைடு கலந்து கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து ஜோலி அவருக்கு சயனைடு வாங்கிக் கொடுத்த உறவினர் மேத்யூ, நகைத் தொழிலாளி பிரஜூகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலைகளில் ஜோலியின் 2வது கணவன் ஷாஜி மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்த போது கோழிக்கோட்டில் உள்ள என்ஐடி பேராசிரியையாக பணிபுரிந்து வருவதாக ஜோலி கூறியது பொய் என்பது தெரியவந்தது.

ஜோலி தனது முதல் கணவன் ராய்தாமஸ், 2வது கணவன் ஷாஜூ உள்பட குடும்பத்தினர் அனைவரையும் என்ஐடியில் பணிபுரிந்து வருவதாகவே நம்பவைத்ததாக கூறப்படுகின்றது.

தான் பேராசிரியை என்பதை நம்ப வைக்கும் விதமாக ஜோலி தினமும் காலையில் வேலைக்கு செல்வதாக கூறி கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் என்.ஐ.டிக்கு சென்று வந்து நாடகமாடியதாக 2 வது கணவர் ஷாஜி தெரிவித்துள்ளார்.

ஜோலிக்கு ஆண் நண்பர்கள் அதிகம் என்றும் அவர்களுடனான எல்லை மீறிய தொடர்புக்கு குடும்பத்தினர் இடையூறாக இருப்பதாக நினைத்து முதலில் சூப்பில் சயனைடு கலந்து கணவர் ராய் தாமஸை கொலை செய்ததாகவும், அதன் பின்னர் மாமனாரையும், மாமியார் அன்னம்மாளையும் சாப்பாட்டில் சயனைடு கலந்து கொலை செய்து விட்டு , உயிரிழந்தவர்களின் முகத்தில் முத்தமிட்டு கதறி அழுது அவர்கள் இயற்கையாக உயிரிழந்தது போல நடித்து நம்ப வைத்துள்ளார் என்கின்றனர் காவல்துறையினர்.

கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் சிலருடன் ஜோலிக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதை அவரது செல்போன் எண் மூலம் கண்டறிந்த காவல்துறையினர் அவரது மாமனார் சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதையும் கண்டுபிடித்தனர்.

ஜோலி , பலமுறை கருக்கலைப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளதால் அவர் பல ஆண்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது அம்பலமாகியுள்ளது. ஜோலிக்கு பெண்களை பிடிக்காது என்பதால் பலரை கொல்ல திட்டமிட்டதாகவும், கணவரின் மாமியார், 2 வது கணவரின் மனைவி, மகள் ஆகியோர் இலக்கானதாகவும், அதிர்ஷ்டவசமாக 5 க்கும் மேற்பட்ட பெண்கள் தப்பியதாகவும் கோழிக்கோடு காவல் கண்காணிப்பாளர் சைமன் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் இருந்து சடலங்களை தோண்டி எடுத்து வரும் காவல்துறையினர். உடல் கூறுகளை ஆய்வு செய்வதற்காக வெளி நாட்டிற்கு அனுப்பி வைக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஜோலியின் இந்த தொடர் கொலை குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தேகம் எழுப்பிய அவர்களது உறவினர் ஒருவரும் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். அவரது மரணத்துக்கும் ஜோலி தான் காரணமா ? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

கர்நாடகாவை கலக்கிய சயனைடு மல்லிகா போல கேரளாவில் பீதியை கிளப்பி விட்டிருகிறார் இந்த சயனைடு ஜோலி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments