உயிரை குடித்த கடைசி குடி..! சத்திய வாக்கு பரிதாபங்கள்

0 513

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, கடைசியாக குடிக்க போவதாக கூறியபடியே அளவுக்கதிகமாக மது அருந்திய விவசாயி ஒருவர் பரிதாபமாக பலியானார். இனி குடிக்க போவதில்லை என்று சத்தியவாக்கு செய்ய சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையத்தை சேர்ந்த விவசாயி கார்த்திகேயன் மது பழக்கத்துக்கு அடிமையான இவர் தினந்தோறும் குடிபோதையில் வீட்டுக்கு சென்று மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இதனை அவரது உறவினர்கள் கண்டித்த போதும் கார்த்திகேயன் குடிப்பழக்கத்தை விடவில்லை.

இதற்கிடையே பண்ருட்டி அருகே கொஞ்சிக்குப்பம் அய்யனார் கோவிலுக்கு சென்று சத்தியவாக்கு கொடுத்து கையில் மந்திரித்து கயிறு கட்டிக் கொண்டால் குடிப்பழக்கம் நின்று விடும் என்று சிலர் கார்த்திகேயனுக்கு யோசனை தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவத்தன்று கொஞ்சிக்குப்பம் அய்யனார் கோவிலுக்கு சென்று கையில் மத்திரித்து கயிறு கட்டிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து புறப்பட்டுள்ளார் கார்த்திகேயன். செல்லும் வழியில், நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று சத்திய வாக்கு கொடுத்து கயிறு கட்டிய பின்னர் குடிக்க முடியாது என்பதால் இன்றே கடைசியாக ஆசைதீர குடித்து விடுவோம் என்று எண்ணி டாஸ்மாக் பாருக்குள் நுழைந்துள்ளார்.

போதை ஏற ஏற ஆசை அடங்காமல் அளவுக்கு அதிகமாக மது வாங்கி குடித்த கார்த்திகேயன், போதையிலேயே நடந்து அய்யனார் கோவில் அருகில் சென்றார். குறிப்பிட்ட தூரத்துக்கு பிறகு போதை மயக்கத்தில் அவரால் நடக்க முடியாமல் அங்கேயே மயங்கி விழுந்து பரிதாபமாக பலியானதாக கூறப்படுகின்றது.

இருந்தாலும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு கார்த்திகேயனை பரிசோதித்த மருத்துவர்கள் கார்த்திகேயன் உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியை மறக்க நினைப்பவர்கள் ஒரு நிமிடம் தனது மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து பார்த்தால் போதும் குடியை விட்டு விடலாம், நாளைக்கு விடலாம், நாளை மறுநாள் விடலாம் என்று போதைக்கு அடிமையாகி கிடந்தால் இறுதியில் உயிரையே விட வேண்டிய விபரீதம் நிகழும் என்பதற்கு நிகழ்கால சாட்சியாக மாறி இருக்கிறார் விவசாயி கார்த்திகேயன்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments