சித்திக்கொடுமை 2.0 பெண் குழந்தை கொலை..! திகிலில் மென் பொறியாளர்

0 4550

சென்னை தாம்பரம் அருகே மென் பொறியாளரின் முதல் மனைவிக்கு பிறந்த 6 வயது குழந்தையை, கழுத்தை நெரித்து கொலை செய்து மாடியில் இருந்து தூக்கி வீசியதாக அவரது இரண்டாவது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். சித்தி கொடுமையின் அதிர்ச்சி பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி...

சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் சக்கரபானி தெருவை சேர்ந்த மென்பொறியாளர் பார்த்திபன் துரைப்பாக்கத்தில் உள்ள மென் பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு ராகவி என்ற ஆறு வயது மகள் உள்ள நிலையில் முதல் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து சூர்யகலா என்ற பெண்ணை பார்த்திபன் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

சூரியகலாவிற்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும், அவர் தன்னுடைய முதல் கணவனுக்கு பிறந்த ஆண் குழந்தையை தன்னுடன் வளர்த்து வந்தார். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த குழந்தை ராகவி , தனது சித்திக்கு பிறந்த தம்பி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்

சம்பவத்தன்று தனது சித்தியுடன் வீட்டில் தனியாக இருந்த நிலையில் குழந்தை ராகவியை 2 மணி நேரமாகக் காணவில்லை என்றும் அவரை தேடி வருவதாகவும் தனது கணவருக்கு சூரியகலா செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே வீட்டிற்கு வந்த பார்த்திபன் அப்பகுதி முழுவதும் ராகவியை தேடியுள்ளார். அப்போது வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து பார்த்தபோது வீட்டின் பின்புறத்தில் ராகவி சடலமாக கிடப்பதை பார்த்து பார்த்திபன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சேலையூர் போலீசார் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்தனர். சிறுமி மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்திருக்கலாம் என முதலில் போலீசாரிடம் கூறப்பட்டது. ஆனால் மாடியில் இருந்து குழந்தையின் சடலம் தூரத்தில் விழுந்து கிடந்ததால், குழந்தை தானாக அங்கு சென்று விழ வாய்ப்புகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திய போலீசார், தூக்கி வீசியது யார்? என்ற கோணத்தில் விசாரணையை முன்னெடுத்தனர்.

அப்போது குழந்தை ராகவி மீது சித்தி சூரியகலா வெறுப்பை வெளிப்படுத்தி துன்புறுத்தி வந்ததை அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து சூரியகலாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

உறவினர்களின் வற்புறுத்தலாலும், தனது பெண் குழந்தையை நல்ல முறையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, பார்த்திபன் செய்திதாளில் நிபந்தனைகளுடன் விளம்பரம் வெளியிட்டு பெண் தேடியுள்ளார். இருவருக்கும் ஒரு குழந்தை இருப்பதால் புதிதாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்ற உடன்பாட்டுடன் இருவரும் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது.

பார்த்திபன் தனது முதல் மனைவியின் குழந்தையான ராகவி மீது தான் அதிக அன்பு செலுத்தியதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் புதிதாக குழந்தை பெற்றுக் கொண்டால் தான் கணவன் பிரிந்து செல்ல மாட்டார் என்று சூரியகலாவிடம் அவரது உறவினர்கள் தூபம் போட்டுள்ளனர். இதையடுத்து தன்னுடைய சாமர்த்தியத்தால் கணவன் பார்த்திபன் மூலமாக சூரியகலா கருவுற்றதாக கூறப்படுகின்றது.

ஏற்கனவே தனக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் 3வது குழந்தை வேண்டாம் என்று வெறுப்பு காட்டிய பார்த்திபன் குழந்தையை கலைத்துவிட கூறியுள்ளார். முதல் மனைவிக்கு பிறந்த இந்த பெண் குழந்தை இருப்பதால் தானே தன்னுடைய கருவை கலைக்க சொல்கிறார் என்ற ஆத்திரத்தில் குழந்தை ராகவியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளாள் கொடூர சித்தி சூரியகலா,..!

இதையடுத்து குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்தது போல் இருக்க வேண்டும் என்பதற்காக சடலத்தை மாடியில் இருந்து கீழே தூக்கி வீசியுள்ளார். இதில் அங்கு கிடந்த கற்குவியலில் பட்டு குழந்தையின் தலை சிதறியுள்ளது. இதையடுத்து, சூரியகலாவை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு தாய் வேறு, சித்தி வேறு என்று ஒரு போதும் அடையாளம் தெரியாது, தங்களிடம் சிரித்த முகத்துடன் அன்பு காட்டும் தாயுள்ளம் கொண்ட அனைவருமே அவர்களுக்கு தாயாகத்தான் தெரிவார்கள். ஆனால் தான், தனக்கு என்ற எண்ணம் கொண்ட கொடூர மனம் படைத்த கொலைகாரி சூரியகலா போன்றவர்களின் நடவடிக்கைகள் எப்போதுமே குடும்ப உறவுகளுக்கும், அவர்களது உயிருக்கும் ஆபத்தை உண்டாக்க கூடியவை என்று எச்சரிக்கின்றனர் மனோதத்துவ நிபுனர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments