இந்தாண்டு மட்டும் சட்டவிரோதமாக நுழைய முயன்றதில் 10 லட்சம் பேர் கைது என அமெரிக்கா தகவல்

0 341

2019ஆம் நிதியாண்டில் மட்டும், சுமார் 10 லட்சம் பேர் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்டு கைது செய்யப்பட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கு அமெரிக்க நாடான மெக்சிகோ வழியாக பலர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறிவருவது வாடிக்கையாக இருந்துவருகிறது.

இதைத் தடுக்க பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் இதனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவ்வாறாக நுழைவோர்களில் மெக்சிகோ நாட்டினரே அதிகம் எனவும் அதற்கு அடுத்தபடியாக கவுதமாலா மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே சட்டவிரோதமாக உள்நுழைவதைத் தடுக்கும் விதமாக மெக்சிகோ எல்லையில் பெரும் பொருட்செலவில் அமெரிக்கா சுவர் எழுப்பிவருகிறது. அந்தவகையில் தற்போது வரை சுமார் 71 மைல் வரை சுவர் எழுப்பப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுக்குள் 450 மைல்களுக்கு சுவர் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2019ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முற்பட்டு கைது செய்யப்பட்டதாக அமெரிக்க எல்லை ரோந்து படை கமிஷனரான மார்க்  மார்கன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 88 சதவிகிதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments