ரவுடியின் மிரட்டல் ஆடியோ - ரவுடிகளின் வாட்ஸ்ஆப் குழுவில் புகுந்து எச்சரிக்கை விடுத்த உதவி காவலர்

0 760

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள ரவுடி, தன்னை பிடித்துக் கொடுத்த உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்த நிலையில், அந்த ரவுடியை செல்போனில் தொடர்பு கொண்டு உதவி ஆய்வாளர் எதிர் சவால் விடுத்த ஆடியோ வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் இசக்கி ராஜா. கிக்பாக்சரான இவர் ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் துடிப்புமிக்க காவல் அதிகாரி ஆவார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டில் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக கூலிப்படை ரவுடி மட்டை மாடசாமி என்பவரை கைது செய்து மதுரை சிறப்பு படையிடம் ஒப்படைத்தார்.

ஜாமீனில் வெளிவந்துள்ள ரவுடி மட்டை மாடசாமி மீண்டும் குற்றசெயல்களில் ஈடுபட்டுவருவதாக கிடைத்த தகவலின் பேரில் மாடசாமியின் சொந்த ஊரான பாரைக்குட்டம் கிராமத்திற்கு உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தேடிச்சென்று உள்ளார்.

இதனை அறிந்த மட்டை மாடசாமி தலைமறைவாக இருந்து கொண்டு இசக்கிராஜாவை கொலை செய்யப்போவதாக தனது வாட்ஸ் ஆப்பில் பகிரங்கமாக மிரட்டல் விடுத்து ஆடியோ ஒன்றை பதிவிட்டார்

இதையடுத்து மட்டை மாடசாமியின் செல்போனில் தொடர்பு கொண்ட உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, எங்கே இருக்கிறாய் நேரில் வருகிறேன் முடிந்தால் வெட்டு பார்க்கலாம் என்று எதிர்சவால் விடுத்தார். அதற்கு ரவுடி நான் அப்படி சொல்லவில்லை என்று பம்மிப் பதுங்கும் ஆடியோ தற்போது வைரலாகி வருகின்றது

ஏற்கனவே ரவுடிகளின் வாட்ஸ் ஆப் குழுவில் புகுந்து எச்சரிக்கை விடுத்து ரவுடிகளை கலங்கடித்தவர் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

காவல் துறையினரின் உயிருக்கு குறிவைக்கும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments