சென்னையில்... ஸ்மார்ட் பார்க்கிங்..!

0 468

சென்னையில் குறைந்த கட்டணம் மற்றும் பாதுகாப்பான முறையில் வாகனங்களை பார்க்கிங் செய்யும் ஸ்மார்ட் பார்க்கிங் சிஸ்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. 

சென்னை மாநகரில் மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல மாநகர பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து மற்றும் இருச்சக்கர வாகனங்கள் கார்களையும் பயன்படுத்துகின்றனர்.

இதில் ஒரே ஒரு நபர் , அல்லது இருவர் பயணிக்கும் கார்களையும் அதிகமாக காணமுடிகிறது. அவ்வாறான சூழலில், அவர்கள் பொது போக்குவரத்தை உபயோகிக்கும் போது போக்குவரத்து நெரிசல் அதிகளவில் குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சென்னையில் தியாகராய நகர், புரசைவாக்கம், சவுக்கார்பேட்டை போன்ற வணிக ரீதியான இடங்களுக்கு வரும் கார்கள் பார்க்கிங் செய்ய இடத்தை தேடி அலைவதாலும், முறையாக பார்க்கிங் செய்யாததாலும், பல நேரங்களில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகிவிடுகிறது.

இதுபோன்ற பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், சென்னை மாநகராட்சியும் எஸ்.எஸ்.டெக் நிறுவனமும் இணைந்து சென்னை மாநகரில் ஸ்மார்ட் பார்க்கின் சிஸ்டம் என்ற புதிய முறையை செயல்படுத்தவுள்ளது. தற்போது சோதனை அடிப்படையில் செயல்பட்டுவரும் இந்த திட்டம் விரைவில் முதல்வர் அவர்களால் துவக்கிவைக்கப்படவுள்ளது.

முதற்கட்டமாக தி.நகர் பாண்டி பசார் சாலை, வாலாஜா சாலை, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலை, பெசண்ட் நகர் கடற்கரை சாலை, சென்னை மெரினா கடற்கரை டி.ஜி.பி.அலுவலகம் எதிரே உள்ள சாலை, அண்ணா நகர், அம்பத்தூர் என 4 ஆயிரத்து 375 கார்களை நிறுத்தும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி மேலே குறிப்பிட்டுள்ள இடங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்ய ஆன் லைன் மூலமாக இடத்தை புக் செய்ய வேண்டும். இதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் பார்க்கிங் என்னும் செயலி துவக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை பார்க்கிங் செய்யும் இடம் ழுழுவதும் சி.சி.டி.வி.கேமிராக்கள் கொண்டு கண்காணிக்கப்படும். இதற்காக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ஒரு கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

வாகனங்களை பார்க்கிங் செய்யும் போதே வாகனத்தின் பதிவு எண் மற்றும் வாகனம் பார்க்கிங் செய்த நேரம் உள்ளிட்ட விவரங்கள் கட்டுபாட்டு அறைக்கு வந்துவிடும்.

கார்களை பார்க்கிங் செய்ய குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை வசூலிக்கப்படவுள்ளது. இருச்சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 5 ரூபாய் வசூலிக்கப்படவுள்ளது. 

ஸ்மார்ட் பார்க்கிங் மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தின் கீழ் உள்ள இடங்களில், விதிகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களை பூட்டுவது, அபராதம் வசூலிப்பது, அதே போல் வாகனத்தை நிறுத்திவிட்டு உரிய தொகை செலுத்தாமல் செல்லும் வாகனத்துக்கு அபராதம் விதிப்பது என அனைத்துக்கும் எஸ்.எஸ்.டெக் நிறுவன அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து காவல்துறையினர் தலையிட முடியாது.

தொடர்ந்து படிப்படியாக பெரு நகர சென்னை மாநகராட்சி பகுதிகள் முழுவதிலும் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ஒருபக்கம் பார்க்கிங் பிரச்சனையை ஒழுங்குமுறை படுத்த இந்த திட்டத்தை கொண்டு வந்திருந்தாலும், இதன் நோக்கம் மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை அதிகரிக்க செய்யவே கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் இந்த திட்டத்தின் தொழில்நுட்ப ஆலோசகர். 

பார்க்கிங் திட்டத்துக்கான கட்டணத்தை படிப்படியாக உயர்த்தியதன் மூலம் லண்டன் மாநகரில் பொது போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வைத்ததாக கூறுகின்றனர். மேலும் பார்க்கிங்குக்காக வசூலித்த தொகையை பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கின்றனர். இதே நிலை சென்னையிலும் உருவாக்கவே இந்த திட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அடுத்ததாக வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்படும் வாகனத்துக்கும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் திட்டம் பரீசீலனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments