சாதனைப் பயணத்தில் “பனை” மனிதர்கள்

0 141

ராமநாதபுரம் அருகே பனைவிதைகளை சேகரித்து, பதியமிட்டு அவற்றை கண்மாய், ஏரி உள்ளிட்டவற்றின் கரைகளில் நட்டு பராமரித்து வருவதோடு, ஆர்வத்துடன் வந்து விதைகளைக் கேட்பவர்களுக்கும் இலவசமாக வழங்கி வருகிறது இளைஞர் குழு ஒன்று......

தமிழகத்தின் மாநில மரமாக கருதப்படும் பனைமரத்தை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களில் அதிக அளவில் காணலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கால் நூற்றாண்டுக்கு முன்புவரை காணும் இடமெல்லாம் செழித்து வளர்ந்திருந்த பனை மரங்களை இன்றைய தேதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே காண முடிகிறது.

பனையிலிருந்து கிடைக்கும் பதநீரைக் கொண்டு தயாராகும் கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் உடலுக்கு பெரிய அளவில் நன்மை பயப்பவை. மண் வளத்தை பாதுகாப்பதோடு, மண் அரிப்பையும் தடுக்க வல்லவை பனைமரங்கள்.

ராமநாதபுரத்தை அடுத்த அரியகுடியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்து பனைவிதைகளை சேகரித்து, அரியக்குடி, புதூர் ,முத்திவயல், சத்திரக்குடி, போகலூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள கண்மாய், வயல்களில் நட்டு அதனை பராமரித்து வருகின்றனர். 47 பேர் 3 குழுக்களாக பிரிந்து பனை விதைகளை சேகரிப்பது, அதனை நடுவது, பராமரிப்பது என தீவிரமாக இயங்கி வருகின்றனர்.

பனை வளர்ப்பில் ஆர்வம் உடையவர்கள் தங்களை தொடர்புகொண்டால் நேரடியாக அவர்களுடைய இடத்துக்கே வந்து பனை விதைகளை நட்டு, அதனை பராமரிப்பதற்கான வழிமுறைகளையும் சொல்லித் தருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

ராமநாதபுரம் சுற்றுவட்டாரத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ஒரு லட்சம் பனை விதைகளை இந்தக் குழு நட்டு பராமரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

பனைமரம் வளர்ந்து பயன் தர பல ஆண்டுகள் ஆகும் என்றாலும் தங்கள் நலத்தை பார்க்காது, எதிர்வரும் தலைமுறைக்காக இதனைச் செய்வதாகக் கூறும் அரியகுடி இளைஞர்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பும், பாராட்டுகளும் கூடிக்கொண்டே செல்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments