மாமல்லபுரத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு தடை

0 473

சீன அதிபர் - பிரதமர் மோடி சந்திப்பு நடைபெறவுள்ளதையொட்டி மாமல்லபுரத்தில் வரும் 13ம் தேதி வரை சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெலிகேம்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய குழுவினர், சீன அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 11ம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை புரிய இருக்கிறார்.  பெய்ஜிங்கிலிருந்து சென்னை வரும் சீன அதிபர், மாமல்லபுரத்தில் வைத்து, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

பின்னர், மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை இரு தலைவர்களும் பார்வையிடுகின்றனர்.

இதையொட்டி சென்னையிலிருந்து, மாமல்லபுரம் வரையிலான பகுதிகளும், மாமல்லபுரத்திலுள்ள முக்கிய சுற்றுலா தளங்களும், காவல்துறையின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இரு தலைவர்களும் சந்திக்கும் மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, 5 ரதம், கடற்கரை கோவில் மற்றும் கோவளம் தாஜ் ஓட்டல் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் 5 குழுக்களாக பிரிந்து, மோப்பநாய் உடன், தணிக்கை பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி மாமல்லபுரத்தில் தீவிர வாகன தணிக்கைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்களின் ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது. 

கோவளத்தில் ஹெலிபேடு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சாலை தடுப்புச்சுவர்களுக்கு வண்ணம் பூசுதல், பதாகை அமைத்தல், வரவேற்பு நுழைவாயில் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வருகிற 13ம் தேதி வரை மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு வருவதற்கு, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே போல் திருமண நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் ஹெலிகேம்கள் எனப்படும் ட்ரோன் கேமராக்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 95 ட்ரோன் கேமராக்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு அதனை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் கண்காணிப்பு கேமராக்கள், மின்கம்பங்களில் எல்.இ.டி விளக்குகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று நாள் முழுவதும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடற்கரை மற்றும் ஐந்துரதம் ஆகிய பகுதிகளில் இருந்த செல்போன் டவர்கள் அகற்றப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று வெண்ணெய் பாறை அருகிலுள்ள செல்போன் டவர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, வடக்கு மண்டல ஐ.ஜி நாகராஜன், டி.ஐ.ஜி தேன்மோழி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோரும் உடன் ஆய்வு செய்தனர். தொடர்ந்து பெண் அதிகாரி தலைமையிலான சீன அதிகாரிகள் 10 பேர் மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். சீன அதிபர் தங்கவுள்ள ஹோட்டலில் இருந்து அவர் பயணிக்கும் சாலை முழுவதிலும் சீன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கடற்கரை கோவில் அருகே, சீன அதிபரும், பிரதமரும் சந்தித்து பேச உள்ள இடத்தில், தேநீர் அருந்துவதற்காகவும், பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் குண்டு துளைக்காத கண்ணாடி அறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் தலைவர்கள் சந்திப்பின் போது நடைபெறவுள்ள பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுக்காக மேடை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதே போல் எல்.இ.டி விளக்குகள் அமைக்கும் பணிகளும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. உள்ளூர் வாசிகள் மட்டுமே மாமல்லபுரத்தில் தங்கவும், வெளியூர்க்காரர்கள், உறவினர்கள் இன்று இரவுக்குள் வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட திட்டமிட்டிருந்ததாக தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வரும் திபெத்திய பேராசிரியர் டென்சில் நோர்பு என்பவரை நீலாங்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் திபெத்தியர்கள் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறப்படுகிறது. போராட்டம் நடத்த மேலும் யாரேனும் திட்டமிட்டுள்ளனரா என்பது குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் புதிதாக திபெத்தியர்கள் யாரேனும் வந்துள்ளனரா என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த ஒரு பெண் உள்ளிட்ட 8 திபெத்தியர்களை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையிலடைத்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments