மூன்று தொகுதிகளிலும் களைகட்ட துவங்கியுள்ள தேர்தல் பிரச்சாரம்

0 267

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 3 தொகுதிகளிலும் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 3 தொகுதிகளிலும் பிரச்சாரம் களைகட்ட துவங்கியுள்ளது.

நாங்குநேரி 

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட தளவாய்புரத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதராவாக, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வீடு வீடாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கூறி வாக்கு சேகரித்து வருவதாக அவர் தெரிவித்தார். 

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரியில் அமைச்சர் தங்கமணி மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் முன்னிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 500 பேர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். மேலும் நாங்குநேரி அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு பல்வேறு அமைப்பினர் சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட வாகைகுளம், பட்டர்புரம், ஏமன்குளம்,கூந்தன்குளம் உள்ளிட்ட இடங்களில்அமைச்சருடன் வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளருக்கு, ஆரத்தி எடுத்தும், மலர்தூவியும் பெண்கள் வரவேற்பளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மக்களை நம்பித் தான் அதிமுக வேட்பாளரை களமிறக்கியுள்ளதாக தெரிவித்தார்.

புதுச்சேரி 

புதுச்சேரி காமராஜ்நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு ஆதரவாக, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சூரியகாந்தி நகர் பகுதியில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமிக்கு தோல்வி பயம் வந்து விட்டது எனக் கூறினார்.

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் புவனேஸ்வரனை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட ஞானப்பிரகாசம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளும் அரசு எதிர்க்கட்சிகளை குறைகூறுவதை கைவிட்டு மக்கள் நலப்பணிகளை ஆற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

நெல்லை நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செட்டிக்குளம் பகுதியில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

முதற்கட்ட பிரச்சாரத்திற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர், நெல்லை செட்டிக்குளம் பகுதி மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். சட்டமன்ற உறுப்பினராக ருபி மனோகரன் வந்தவுடன், அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என அவர் உறுதியளித்தார். இதனையடுத்து அவர் மேலகுளம், அரியகுளம், உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

விக்கிரவாண்டி 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்தார். விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி கானை அருகே உள்ள சிறுவாலை என்ற ஊரில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்த அவர், அதிமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் வாக்காளர்களை சந்தித்து நலம் விசாரித்ததுடன், அவர்களது குறைகளையும் கேட்டார்.

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட வி.சாலை, அடைக்கலாபுரம், கொங்கராம்பூண்டி,மேலகொந்தை, ஆசூர் உள்ளிட்ட கிராமங்களில் கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.என்.நேரு,இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றிபெறும் என்பதை முறியடித்த கட்சி திமுக என்று பெருமிதம் தெரிவித்தார்.

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட கெடார், சூரப்பட்டு, ஏழுசெம்பொன், வீராமூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வீடு வீடாக சென்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப விக்கிரவாண்டி தொகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட கஞ்சனூர், வெங்காயகுப்பம், மேல்காரனை, சங்கீதமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நந்தன் கால்வாய் திட்டம் முழுமை அடைய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கெடார், சூரப்பட்டு, ஏழுசெம்பொன், வீராமூர், சிறுவாலை ஆகிய ஊர்களில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்தார். வீடு வீடாக சென்று வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப விக்கிரவாண்டி தொகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments