மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன் ...! சீனாவிற்கும் தமிழகத்திற்குமான உறவு என்ன ?

0 642

சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் சந்தித்து பேச மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்தும், சீனாவுக்கும், தமிழகத்திற்கு இடையிலான உறவு குறித்தும் விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

உலகில் முதலில் நாகரீகம் அடைந்த குடிகளில் தமிழ் குடியும் ஒன்று என்பதாலும், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கடலோடுவதிலும், கடல் கடந்த வியாபாரம் செய்வதிலும் தமிழர்கள் தனி தேர்ச்சி பெற்றிருந்தனர்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் கிழக்கு பேரரசாக இருந்த சீனாவும், மேற்கத்திய பேரரசாக இருந்து ரோம் சாம்ராஜ்யமும் தமிழகத்தையே தங்களின் வர்த்தக மைய இடமாக கொண்டிருந்தன. கிழக்கில் இருந்து வந்த பொருட்களையும், மேற்கில் இருந்து வந்த பொருட்களையும் தமிழக வணிகர்களே வாங்கி விற்று வந்தனர். 

சங்க காலப் பாடலான பட்டினப்பாலையில் சீனா பட்டு, குணகடல் துகிர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சங்க காலத்திற்கு பின்னர் முடிவேந்தர் மூவரின் ஆட்சியும் முடிந்து களப்பிரர் வசம் தமிழகம் வீழ்ந்து கிடந்த மூன்று நூற்றாண்டு காலத்திலும் தமிழகத்திற்கும் சீனாவுக்குமான வணிகம் தொடர்ந்தது.

கிபி மூன்றாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு பேரரசை உருவாக்கிய பல்லவர்கள், தொடக்கம் முதலே சீனத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். அவர்களின் துறைமுகமாக மாமல்லபுரத்தில் சீன வணிக கப்பல்கள் ஆடி நின்றன. மாமல்லனான முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் சீன பயணியான யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார்.

முதலாம் நரசிம்ம வர்மன் காலத்தின் தான் சீன பட்டுத்துணி முதலில் காஞ்சிபுரத்தில் நெசவு செய்யப்படத் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை காஞ்சி பட்டு தனி சிறப்பு பெற்றிருக்க, அங்கு தான் இந்தியாவிலேயே முதன் முதலில் பட்டு நெசவு தொடங்கியது என்பது தான் காரணம்.

பட்டு நெசவு ரகசியத்தை பெற தமிழகத்தின் புராதன மருத்துவத்தை சீனத்திற்கு பல்லவர்கள் தாரை வார்க்க நேர்ந்ததாகக் கூறுகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அத்துடன் நாகையில் சீன வணிகர்கள், துறவிகள் தங்க இரண்டாம் நரசிம்மவர்மன் சத்திரமும், கோவிலும் கட்டவும் அனுமதி அளித்தான்.

சீன நாட்டு புத்த மத மாணவர்கள் படிக்கும் கடிகைகளும் காஞ்சியில் கட்டப்பட்டிருந்தன. முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் பல்லவ தூது குழுவினர் சீன மன்னரின் அவையில் வீற்றிருந்தனர்.

நரசிம்மவர்மன் காலம் முதல் பல்லவர்களின் கடைசி மன்னனான அபராஜித்த வர்மன் காலம் வரையிலான பல நூறு ஆண்டுகாலம் சீன வணிகர்களுக்கு மாமல்லபுரமே வியாபார தலமாக இருந்தது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தொல்லியல் துறை ஆய்வாளரும், அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியருமான எஸ்.ராஜவேலு, சீனாவில் வாழும் 'ஹன்' எனப்படும் வணிக இனக் குழுவினர் தமிழர்களோடு நேரடியான வணிகத் தொடர்பு வைத்திருந்தார்கள் என்றார்.
கிமு 185-149 ஆண்டுகளில் வாழ்ந்த சீன அரசர் வீய், தங்கள் நாட்டில் உள்ள வர்த்தகர்களை காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வர்த்தகம் செய்ய ஊக்கப்படுத்தியதற்காக குறிப்பிகள் உள்ளதாக அவர் கூறினார்.

சீனாவில் காஞ்சிபுரத்தை ஹுவாங்-செ(“Huang-Che”) என்று குறிப்பிடுவார்கள் என்றும், சீன அரசர்கள் தங்கள் பிரதிநிதிகளை காஞ்சிபுரத்துக்கு அனுப்பியுள்ளனர் என்றும், மாமல்லபுரம் அருகே இருக்கும் வயலூர் சான்றுகளை ஆய்வு செய்த போது, காஞ்சிக்கும் சீனாவுக்கும் தொடர்பு இருந்ததன் முக்கிய ஆதாரமாக சீன மண் ஜாடிகள், சீன நாணயங்கள் சிக்கியதாக அவர் கூறினார். 

சீனாவில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் தமிழர்களின் ஓலைச்சுவடிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சீனாவுக்கும், மாமல்லபுரத்திற்கும் இடையிலான பல நூறு ஆண்டு கால வணிக, வரலாற்று தொடர்பை நினைவு கூறவே மோடி, ஜி ஜின் பிங் சந்திப்புக்கு மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments