ஒத்த செருப்பு சைஸ் 70..!! பக்தி முத்தியதால் பரவசம்

0 448

கரூர் அருகே சாமி கனவில் வந்து கூறியதாக ஒருவர் சொன்னதை நம்பி சாமிக்கு காணிக்கையாக செலுத்த பெரிய அளவிலான ஒத்த செருப்பை செய்து சிலர் தலையில் சுமந்து சென்றனர். பாதயாத்திரை சென்ற பக்தர்களின் பரவசம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

ஒத்த செருப்பு சைஸ் நம்பர் 7....! என்ற பெயரில் படத்தை எடுத்த இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் அதனை ஆஸ்கார் விருதுக்கு கொண்டு சென்று விட வேண்டும் என்று பகீரத பிரயத்னம் செய்து வருகின்றார்.

அதே பாணியில் நிஜமாகவே ஒரு காலுக்கு மட்டும் பெரிய அளவில் ஒத்த செருப்பு செய்து பக்தர்கள் சிலர் ஊர் ஊராக பாதயாத்திரை சுற்றிவரும் வினோதம் கரூர் அருகே அரங்கேறி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கருங்கல் அடுத்த சின்னதம்பி பாளையத்தை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளிகள் ஒன்று கூடி, செம்மாளி எனப்படும் செருப்பை தயார் செய்து கரூர் அருகே தான்தோன்றி மலை கல்யாண வெங்கட ரமண சாமிக்கு காணிக்கையாக செலுத்துவதை வழக்கமாக செய்து வந்துள்ளனர்.

இடையில் சில வருடங்கள் அந்த காணிக்கை செலுத்தவில்லை என்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் நாகராஜ் என்பவர், தனது கனவில் சாமி தோன்றி ஒத்த செருப்பு வேணும் என்று கேட்டதாகவும் அதன் அளவையும் சாமியே கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தாங்கள் கைவிட்ட ஒத்த செருப்பு சாங்கியத்தை மீண்டும் சாமிக்கு செய்வது என முடிவெடுத்து, 70 ஆம் நம்பர் அளவில் பெரிய அளவிலான ஒத்த கால் செருப்பை தோலினால் கலை அலங்கார வேலைப்பாடுகளுடன் உருவாக்கினர். பின்னர் சின்னதம்பி பாளையத்தில் இருந்து ஒத்த செருப்பை தலையில் சுமந்தபடி கரூர் நோக்கி பாதயாத்திரை புறப்பட்டனர்.

சாமிக்கு செருப்பு செய்து கொடுப்பது என்று முடிவாகி விட்டது அப்புறம் என்ன ஜோடியா செய்து வைக்க வேண்டியது தானே என்று கேட்டதற்கு சாமியின் ஒரு கால் மட்டுமே தரையில் படுவதால் ஒத்த செருப்பு மட்டும் தயார் செய்து கொண்டு போவதாகத் தெரிவித்தனர்.

இப்படித்தான் பக்தர்கள் பரவசமாகிவிடுவர் என்று சிலர் கேலி பேசினாலும், இது அவர்களின் அப்பழுக்கற்ற பக்தி என்றும் மெய்சிலிர்க்க வைத்ததாகவும் ஆன்மீக வாதிகள் தெரிவித்தனர்.!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments