முதலாவது ரஃபேல் போர் விமானத்தை இன்று வழங்குகிறது பிரான்ஸ் நிறுவனம்

0 399

பிரான்சில் தயாரான ரஃபேல் ரக போர் விமானம் இந்தியாவிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது. பாரிஸ் சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ரஃபேல் விமானத்திற்கு ஆயுதபூஜை செய்து அதில் பயணிக்க உள்ளார். 

பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்திடம், அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரஃபேல் ரக போர் விமானங்களை 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தப்படி முதலாவது விமானம் தயாரிக்கப்பட்டு இந்திய விமானப்படையிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது.

இதனைப் பெற்றுக் கொள்வதற்காக பாரிஸ் சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அந்நாட்டு அதிபர் மெக்ரானை சந்தித்துப் பேசுகிறார். அங்கிருந்து துறைமுக நகரான போர்டோவிற்கு செல்லும் அவர் ரஃபேல் விமானத்தை முறைப்படி பெற்றுக் கொள்கிறார். இன்று தசரா பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், ரஃபேல் விமானத்துக்கு ராஜ்நாத் சிங் ஆயுத பூஜை செய்வார் என்றும், பின்னர் போர் விமானத்தில் பறக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிரான்ஸ் ராணுவ அமைச்சர், இந்திய விமானப்படைத் தளபதி பதோரியா, இரு நாட்டு விமானப்படை மற்றும் தஸ்ஸோ நிறுவன அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

ரஃபேல் ரக முதல் விமானம் இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டாலும், அடுத்த சில மாதங்களுக்கு பிரான்ஸிலேயே இருக்கும். அங்கு 24 விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். முதல் தொகுப்பில் வழங்கப்படும் 4 விமானங்கள் அடுத்த ஆண்டு மே மாதம் இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.

இரட்டை என்ஜின்கள் கொண்ட அதிநவீன போர் விமானமான ரபேல்,வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கவும், வானில் இருந்து பூமியில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட நவீன போர் விமானமாகும்.

இந்த விமானத்தில் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைகளான ஸ்கால்ப் மற்றும் ஸ்டார்ம் ஷேடோ உள்ளிட்ட ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கும். அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த ஏவுகணைகள் நான்கு பிளஸ் பிளஸ் தலைமுறை ஏவுகணைகளாகும். குகைக்குள் பதுங்கியிருக்கும் எதிரிகளை அழிக்க கடினமான பாறையையும் ஊடுருவித் தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

சக்திவாய்ந்த போர்க் கருவிகள், ஏவுகணைகளை பொருத்திப் பயன்படுத்த ஏற்றது என்பதால், இந்திய ராணுவத்துக்கு இவை பலம் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்துவதற்கான உள்கட்டமைப்புகளை இந்திய விமானப்படை ஏற்கெனவே உருவாக்கியுள்ளது. விமானிகளுக்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஃபிரான்சிடமிருந்து வாங்கப்படும் 36 ரஃபேல் விமானங்களில் 18 விமானங்கள் அம்பாலா விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளன.

வியூக முக்கியத்துவம் வாய்ந்த இந்த விமானப் படை தளம் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மீதமுள்ள 18 விமானங்கள் மேற்குவங்கத்தில் Hasimara விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளன. இந்த இரு விமானப்படை தளங்களிலும் 400 கோடி ரூபாய் செலவில், ரஃபேல் போர் விமானங்களை நிறுத்திவைப்பதற்கான கட்டமைப்புகள், பராமரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments