விஜயதசமியையொட்டி குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு

0 343

விஜயதசமியையொட்டி இன்று குழந்தைகளுக்கு வித்யாரம்ப நிகழ்ச்சி நடைபெறுகிறது. குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வசதியாக, அரசு தொடக்கப் பள்ளிகளை இன்று திறந்துவைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு, பத்தாவது நாளான விஜயதசமியன்று தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. குழந்தைகள் கல்வி கற்கத் தொடங்கும் நாளை, வீடுகளில் புனிதமாகக் கொண்டாடும் நாள்தான் விஜயதசமி.

கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பார்கள். மழலைக் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள், நடனம் ஆகிய பயிற்சிகள், பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்குவதும் வழக்கம். ஏற்கனவே கலைகளைக் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களும் குருதட்சணை அளித்து அக்கலையை பயிலுவார்கள்.

மங்களகரமான விஜயதசமி நாளான இன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யப்படுகிறது. குழந்தையின் சுட்டுவிரலை பிடித்து தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தை அல்லது ஓம் என்ற எழுத்தை எழுத வைப்பார்கள். இதன் பிறகு, தங்க மோதிரத்தை கொண்டு குழந்தையின் நாவில் எழுதுவார்கள். குழந்தை தடையின்றி எழுதவும், பேசவும் ஆரம்பமாக இருக்க வேண்டும் என்ற முறையில் மகிழ்ச்சியாக இது கொண்டாடப்படுகிறது.

விஜயதசமியையொட்டி, 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அரசின் தொடக்க வகுப்புகளில் சேர்க்கலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடிகளில் கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

3 வயது பூர்த்தியடைந்த தங்கள் குழந்தைகளை இன்று, அருகாமையில் உள்ள கே.ஜி. வகுப்புகளிலும் 5 வயது பூர்த்தியான குழந்தைகளை அரசுப் பள்ளிகளிலும் சேர்க்கலாம் என்றும், இன்று மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments