பசுமையை நேசிக்கும் பட்டதாரி இளைஞர்.!

0 336

சிவகங்கை அருகே சொந்த ஊரை பசுமையாக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு வகையான விதைகளைச் சேகரித்து, மரக்கன்றுகளாக உருவாக்கி, அவற்றை ஊர்மக்களுக்கு இலவசமாக வழங்கி கவனம் ஈர்த்து வருகிறார் முதுகலை முடித்த பட்டதாரி இளைஞர் ஒருவர்...

காடுகளை அழித்து கழனிகளாக்கி, கட்டிடங்கள் எழுப்பி, சாலை போட்டு என தன் வசதிக்காக இயற்கையை எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டி வருகிறது மனிதகுலம். பருவமழை பொய்த்து, பயிர்கள் காய்ந்து, விவசாயிகளின் உயிர்கள் சில ஆயிரம் பிரிந்த பிறகுதான் உணர்ந்திருக்கிறோம் மரங்களின் அவசியத்தை. அதன் விளைவாக எங்கெங்கும் மரங்கள் வளர்ப்பு குறித்த குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அரசும் மரக்கன்றுகள் வளர்ப்பை தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.

இந்த நிலையில்தான் அறிவியலில் முதுகலை படித்து, ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சொந்த ஊர் திரும்பி விதைகளைச் சேகரித்து மரக்கன்றுகளாக உருவாக்கி அவற்றை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.

சிவகங்கையை அடுத்த ஆ. வேலாங்குளத்தைச் சேர்ந்த அய்யனார் என்ற அந்த இளைஞர், சென்னையிலுள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் கைநிறைய சம்பளத்துக்கு வேலை பார்த்திருக்கிறார். ஒவ்வொரு முறை சொந்த ஊர் செல்லும்போதும் அதன் வறட்சி நிலையைக் கண்டு வெதும்பி இருக்கிறார் அய்யனார்.

மற்றவர்களை குறைகூறுவதோ, சமூக வலைதளங்களில் அறிவுரை சொல்வதோ வீண் வேலை என்று கருதிய அய்யனார், வேலையை உதறித் தள்ளிவிட்டு சொந்த ஊர் திரும்பி பல்வேறு வகையான விதைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். முதலில் கேலி பேசியும், திட்டியும் தீர்த்த கிராம மக்கள், அய்யனாரின் வேகத்தைப் பார்த்து அயர்ந்து போயினர்.

வேம்பு, புளி, மா, ஆலமரம், அரசமரம், அத்தி, பனை என தேடித் தேடி விதைகளை சேகரித்து, மரக்கன்றுகளாக சிறு சிறு பைகளில் இட்டு வளர்த்து வந்திருக்கிறார். அவற்றில் ஆலங்கன்று, அரசங்கன்று உள்ளிட்ட குறிப்பிட்ட மரக்கன்றுகளை மட்டும் அங்குள்ள ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் நட்டுவைத்து கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறார். அவரின் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட குடும்பத்தாரும் ஊர்மக்களும் மெல்ல மெல்ல தோள் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

2க்கு 2 அடி குழி வெட்டிவைத்திருக்கும் யாரொருவர் வந்து கேட்டாலும், குழி வெட்டியுள்ளதை உறுதி செய்தபின்னரே இலவசமாக மரக்கன்றுகளை கொடுக்கிறார் அய்யனார். பணம் வாங்கிக் கொள்ளும்படி வற்புறுத்துவோரிடம் கூட வாங்க மறுக்கும் அய்யனார், அதற்கு பதிலாக மரக்கன்றுகளை கண்ணும் கருத்துமாக நட்டுப் பராமரிக்கும்படி வேண்டுகோள் விடுக்கிறார்.

இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை ஊர்மக்களுக்கு கொடுத்துள்ளதாகக் கூறும் அய்யனார், இந்த ஆண்டு முடிவுக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதே இலக்கு என்கிறார்.

தனது கிராமத்தில் அடுத்து வரும் தலைமுறைக்கு பசுமையான, வளம் கொழிக்கும் பூமியை பரிசளிக்க வேண்டும் என்று அக்கறையுடன் கூறும் அய்யனார், கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல், தைல மர வளர்ப்பை குறைத்தல் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்ற உந்துதல் அளிக்கிறார்.

மாற்றத்தை எதிர்பார்க்கும் ஒவ்வொருவரும் முதலில் தங்களிடம் அந்த மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பார்கள். இனி எல்லாம் மாறும் என்ற நம்பிக்கை கொள்வோம்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments