20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு - மு.க.ஸ்டாலின்

0 469

திமுக ஆட்சி அமைந்தால், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் கருணாநிதி மூன்றாவது முறையாக முதலமைச்சரானவுடன், வன்னிய சமுதாயத்தினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிட்டதோடு, அவர்களை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இட ஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது பதியப்பட்டிருந்த அனைத்து வழக்குகளையும் கலைஞர் ரத்து செய்ததாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வன்னியர் சமுதாயத்திற்கான கலைஞரின் எத்தனையோ சாதனைத் திட்டங்களை பட்டியலிட்டுக் கொண்டே போக முடியும் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்த உடன் வன்னியர் சமுதாயத்திற்காக இட ஒதுக்கீடு கோரி, போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு, விழுப்புரம் மாவட்டத்திலேயே மணி மண்டபம் அமைக்கப்படும் என்றார்.

வன்னியர் சமுதாயத்தின் தனிப்பெருந் தலைவராக திகழ்ந்த ஏ.கோவிந்தசாமி படையாச்சியாருக்கும் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments