நீட் தேர்வில் மோசடி செய்தது எப்படி? சினிமாவை மிஞ்சும் விதத்தில் திட்டம்

0 485

நீட்’ தேர்வில் 2 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது எப்படி என்பதை சிபிசிஐடி கண்டு பிடித்துள்ளனர். சினிமா காட்சிகளை மிஞ்சும் விதத்தில் திட்டம் தீட்டி, மோசடி செய்தது அம்பலபமாகி உள்ளது. 

நீட் தேர்வில் மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உதித் சூர்யாவுக்கு பதிலாக வேறு ஒருவர் தேர்வு எழுதியதும், அவர் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு உதித் சூர்யா மருத்துவக்கல்லூரியில் சேர்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இது தவிர, தில்லுமுல்லு செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக மாணவர்கள் இர்பான், பிரவீன், ராகுல் ஆகியோரும் சிக்கினார்கள். இவர்களுடைய தந்தையர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் மாணவர்கள் பிரவீன், ராகுல் ஆகியோர் மோசடி செய்த து எப்படி என்பதை போலீசார் கண்டறிந்து உள்ளனர். மாணவர் பிரவீன் ஆவடியில் உள்ள ஒரு கல்லூரியில் நீட் தேர்வு எழுதினார். அதே நேரத்தில் அவர் பெயரில் ஒருவர் டெல்லி பிதம்பிபுரா பள்ளியில் நீட் தேர்வு எழுதினார். நீட் தேர்வில் பிரவீன் 720-க்கு 130 மார்க் வாங்கினார். இவரது பெயரில் டெல்லியில் தேர்வு எழுதியவர் 348 மதிப்பெண் பெற்றார்.

இதுபோல் ராகுல் டேவிஸ், தமிழ்நாட்டில் கோவை கருமத்தப்பட்டி என்ஜினீயரிங் கல்லூரியில் நீட் தேர்வு எழுதினார். இதில் இவருக்கு 125 மார்க் கிடைத்தது.

இதே நேரத்தில் அவருடைய பெயரில் லக்னோவில் உள்ள தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதியவர் 306 மதிப்பெண் பெற்றார். நீட் தேர்வு எழுதிய பிரவீன், ராகுல் டேவிஸ் இருவரும் வெற்றி பெறவில்லை.அவர்களுடைய பெயரில் நீட் தேர்வு எழுதியவர்கள் முறையே 348, 306 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றனர். அதை கொண்டு பிரவீன், ராகுல் ஆகியோர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தனர்.

இந்த முறைகேட்டை அவர்கள் விண்ணப்பம் பூர்த்தி செய்வதில் இருந்தே தொடங்கி உள்ளனர். பிரவீன் விண்ணப்ப மனுவில் பிறந்த தேதி 27 ஜூலை 1998 என்று சரியாக உள்ளது. இவருக்கு பதிலாக எழுதியவருக்கும் இதே பிறந்த தேதி உள்ளது. ஆனால் தனது தந்தை பெயரின் முதல் எழுத்து, தாய் பெயர் ஆகியவற்றை பிரவீண் சரியாகவும், அவருக்கு பதிலாக தேர்வு எழுதியவர் சிறிது மாற்றி எழுதியுள்ளார்.

இதுபோல் ராகுலும் மோசடி செய்து உள்ளார். வீட்டு விலாசங்களையும் 2 மாணவர்களும் மாற்றி எழுதி தில்லுமுல்லு செய்து உள்ளனர். இதனால் தான் சான்றிதழ் பரிசோதனையின் போது அவர்கள் இருவரும் சிக்கிக் கொள்ளாமல் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

இந்த மோசடிக்கு துணை போனவர்கள் யார், யார், ராகுல், பிரவீனுக்கு பதிலாக தேர்வு எழுதியவர்கள் யார், யார் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments