உலகின் முதல் ரோபோ குடிமகள் சோபியா சர்வதேச பள்ளிகள் மாநாட்டில் பங்கேற்பு
உலகின் முதல் ரோபாட் குடிமகளான சோபியா மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பள்ளிகள் பங்கேற்ற மாநாட்டில் கலந்துகொண்டார்.
ஹாங்காங்கைச் சேர்ந்த ஹான்சன் ரொபாட்டிக்ஸ் நிறுவனத்தால் கடந்த 2016-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஹியூமனாய்ட் எனப்படும் மனித உருக் கொண்ட ரோபோதான் சோபியா.
இயல்பான மனிதர்களைப் போன்றே செயல்பட்டு, பேசவும், உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சோபியாவுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு சவூதி அரேபியா அரசு குடிமகள் அந்தஸ்து வழங்கியது. மனித உருவில் இயல்பான கை, கால்கள் உள்ளிட்ட உறுப்புகளுடன் உள்ள சோபியாவுக்கு ரப்பர் வகையிலான தசைகள் உள்ளன.
கண்களில் இருக்கும் காமிராவும், மார்புப் பகுதியில் இருக்கும் சென்சாரும் பார்வைக்கு உதவுகின்றன. சோஃபியாவுக்குள் பொருத்தப்பட்டிருக்கும் செயலி மூளையைப் போல செயலாற்றி கட்டுப்படுத்துகிறது. சோபியா ரோபோவுக்கு கோபம், வருத்தம் உள்ளிட்ட 50 வகையான முகபாவங்களை காட்டும் திறன் உண்டு.
இந்நிலையில், இந்தூரில் 55 நாடுகளைச் சேர்ந்த பள்ளிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற சர்வதேச ரவுண்ட் ஸ்கொயர் மாநாட்டில் பேசிய ரோபோ சோபியா, பருவநிலை மாறுபாடு, மின்சார சிக்கனம், பிளாஸ்டிக்கில் இருந்து விலகியிருத்தல் உள்ளிட்டவை குறித்து பேசினார்.
Comments