தாமதமாக நடைபெற்று வரும் ரயில்வே பணிகள் 2022ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் - மத்திய ரயில்வே இணை அமைச்சர்

0 273

நாடு முழுவதும் தாமதமாக நடைபெற்று வரும் ரயில்வே துறை சார்ந்த முக்கிய திட்டங்கள் 2022ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் சி. அங்காடி தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், தாமதமாக நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடைபெற்று வரும் பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னரே புதிய பணிகள் துவக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ரயில்வே துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சீனா போன்ற நாடுகளில் மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்கள் வந்துவிட்ட நிலையில், இந்தியாவில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்கள் மட்டுமே இயங்கி வருவதாக தெரிவித்தார்.

உலக நாடுகளுடன் போட்டி போடும் வகையிலான வளர்ச்சியை எட்டுவதற்கு தனியார் முதலீடுகளை அனுமதிப்பது அவசியமானது என்றும் விளக்கினார். மேலும் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகுவதோடு, தனியார் முதலீடுகள் அதிகரித்து பொருளாதார வளர்ச்சி ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.

லக்னோ - டெல்லி, மும்பை - அகமதாபாத் ஆகிய வழித்தடங்களில் ரயில்வேத்துறை மட்டுமின்றி, தனியாருக்கும் 14 நகர்ப்புற ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சில வழித்தடங்களிலும் ரயில்களை இயக்குவதற்கு தனியாரை அனுமதிக்க ரயில்வே துறை முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments