மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு கட்டணத்தை குறைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

0 194

மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு கட்டணத்தை குறைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்த முகமது காதர் மீரான் என்பவர், நீட் தேர்வு கட்டணத்தை குறைக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் தான் இளநிலை மருத்துவப் படிப்பை முடித்து விட்டு தற்போது முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் தேசிய தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, AIIMS, JIPMER ஆகிய மருத்துவ கல்லூரிகளுக்கு பொருந்தாது என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில்  AIIMS நுழைவுத்தேர்வு கட்டணத்தை விட, NEET - PG நுழைவு தேர்வுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த 2 தேர்வுகளையும், ஒரே தனியார் நிறுவனம் தான் நடத்துவதாக தெரிவித்துள்ள மனுதாரர், கட்டணத்தை குறைப்பது தொடர்பாக சுகாதாரத்துறை முதன்மை செயலர் மற்றும் தேசிய தேர்வாணையத்திற்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என தெரிவித்துள்ளார். எனவே NEET - PG நுழைவு தேர்வு கட்டணத்தை குறைக்க தேசிய தேர்வாணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம்,  தாரணி அமர்வு, நீட் தேர்வை நடத்துவது ஒரு தனிப்பட்ட அமைப்பு எனவும், அதன் கணக்கு வழக்குகள் தணிக்கை செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும் அதன் கட்டணத்தை உயர்த்துவது மற்றும் குறைப்பது குறித்து நீதிமன்றம் எவ்விதமான முடிவையும் எடுக்க இயலாது எனவும் கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments