திருப்பதியில் நாளை கருட சேவை... ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் உலா

0 79

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை நாளை இரவு நடைபெறுகிறது.

இதில் மூலவர் மற்றும் மலையப்பசாமிக்கு அணிவிப்பதற்காக ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து மாட வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நான்காவது நாளான இன்று காலை மலையப்ப சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் மன்னார்குடி ராஜமன்னார் வேணுகோபால கிருஷ்ணர் அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதமாக நான்கு மாட வீதிகளில் உலாவந்தார்.

இதில் பக்தர்களின், கோலாட்டம் கும்மியாட்டம் உள்ளிட்ட தெய்வீக நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாட வீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா..கோவிந்தா..என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை நாளை இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த கிளியுடன் கூடிய மாலை மற்றும் பட்டு வஸ்திரங்கள் இன்று திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டு பெரிய ஜீயர் மடத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னர் யானைகள் அணிவகுப்புடன், நாதஸ்வரம் முழங்க நான்கு மாடவீதியில் ஆண்டாள் மாலை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஏழுமலையான் கோயிலில் வழங்கப்பட்டது.

ஆண்டாள் சூடித் தந்த மாலை நாளை காலை மூலவருக்கும், மோகினி அலங்காரத்தில் வரும் மலையப்ப சுவாமிக்கும் அணிவிக்கப்படவுள்ளது.

இதனிடையே, திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் நான்காவது நாள் இரவு காலிங்க நர்தன அலங்காரத்தில் சர்வ பூபால வாகனத்தில் சுவாமி வீதிஉலா வந்தார். உலகத்தில் உள்ள மன்னர்களுக்கு எல்லாம் தாமே மன்னர் என்பதை உணர்த்தும் வகையில், ஏழுமலையான் கோயில் கோபுர வடிவிலான தங்க சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சர்வ பூபால வாகனத்தில் சுவாமியை தரிசனம் செய்வதால் வாழ்கையில் அகங்காரத்தை ஒழித்து நிரந்தரமான பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதில் ஆந்திரா, தமிழகம், தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலாட்டமும், பஜனைகளும், பல்வேறு வேடம் அணிந்த பக்தர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments