தொழிலதிபர் வீட்டின் கதவை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை - ரூ.2 லட்சம் ரொக்கம் திருட்டு

0 377

தேனியில் தொழிலதிபர் வீட்டின் கதவை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன். தொழிலதிபரான இவர் மூன்று தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் திருப்பதிக்கு ஏழுமலையானை தரிசிப்பதற்காக சென்றுள்ளார். இவரது வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள், நேற்றிரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

அங்கு பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த 200 சவரன் நகைகள் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். தகவலறிந்து சென்ற பழனிசெட்டிபட்டி போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். கொள்ளை குறித்து திருப்பதியில் உள்ள தொழிலதிபர் கோகுலகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொழிலதிபரின் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்படாத காரணத்தால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெளியூர்களுக்கு செல்வோர் தங்களது வீட்டில் அதிக அளவில் பணம் மற்றும் நகைகளை வைப்பதை தவிர்த்து வங்கிகளில் பாதுகாப்பாக வைக்க போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

தவிர்க்க முடியாத சூழலில் வீட்டில் வைத்து செல்வோர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து செல்லும் படி கூறும் போலீசார், வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டால் நடந்த கொள்ளை குறித்து துப்பு துலக்க உதவியாக இருக்கும் என்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments