நீட் ஆள்மாறாட்டம்..! மிரட்டும் கும்பல் -மாணவர்கள் சிக்கிய பின்னணி

0 515

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் உதித் சூர்யாவிற்கு பிறகு சிக்கிய 4 பேரும் ஏற்கனவே ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. முறைப்படி நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின்னர் மாணவர்கள் முறைக்கேட்டில் சிக்கியது எப்படியென விளக்குகிறது இந்த செய்தி

நீட் ஆள்மாறாட்டம் செய்ததாக உதித் சூர்யா என்ற சென்னையை சேர்ந்த மாணவரும், அவரது தந்தையுமான மருத்துவர் வெங்கடேசனும் கைது செய்யப்பட்டனர். உதித் சூர்யாவிற்காக வேறொரு மாணவர் மும்பையில் தேர்வெழுதி, தேர்ச்சி பெற்ற அந்த மதிப்பெண் அடிப்படையில் தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பிறகு ஒரு மாணவி உட்பட 4 பேர் இதே போன்று ஆள்மாறாட்டம் செய்திருப்பதாக புகார் எழுந்த நிலையில், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் இர்பான் என்ற மாணவர் மொரீசியஸ் நாட்டிற்கு தப்பியதாக தெரிவித்த சிபிசிஐடி போலீசார் இர்பானின் தந்தை வாணியம்பாடியைச் சேர்ந்த முகமது சபியை கைது செய்தனர். விசாரணை வளையத்தில் இருந்த மாணவர் ராகுல், பிரவீன் இருவரும் பெற்றோருடன் கைது செய்யப்பட, அபிராமி என்ற மாணவியும் அவரது தந்தையும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது போல் இவர்கள் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் இடம் பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், நீட் தேர்வில் போதுமான மதிப்பெண் கிடைக்காத நிலையில் அதற்காக தரகர் மூலம் பணம் கொடுத்து கல்லூரியில் சேர்ந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இர்பானின் தந்தை முகமது சபியிடம் நடந்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல் வெளியாகியுள்ளது.

தலைமறைவாக உள்ள இர்பான், மாணவி அபிராமி உட்பட 4 பேரும் கடந்த 2015 - 2016-ம் ஆண்டில் கேளம்பாக்கம் அருகே செயல்பட்ட பொன்னையா ராமஜெயம் மருத்துவ கல்லூரியில் ஒரே வகுப்பில் பயின்றவர்கள். அந்த கல்லூரியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என இந்திய மருத்துவ கவுன்சிலால் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. அந்த கல்லூரியில் படித்த 150 மருத்துவ மாணவர்களில் 108 மாணவர்கள் நீதிமன்றம் மூலம் மற்ற கல்லூரிகளில் இடம் கிடைத்து பயின்று வர, ஒரு சில மாணவர்கள் மட்டும் படிப்பை தொடர முடியாமல் இருந்தனர். அதற்குள் நீட் தேர்வு முறையும் கொண்டு வரப்பட வேறு வழியில்லாமல் நீட் தேர்விற்காக தங்களை தயார் செய்தனர்.

இந்த 4 மாணவர்கள் உட்பட பொன்னையா ராமஜெயம் கல்லூரியில் படித்த மேலும் சில மாணவர்கள் அண்ணா நகரில் உள்ள கிரீன் பார்க் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து, ஆவடியில் தேர்வு மையத்தில் எழுதியுள்ளனர்.

இர்பானின் தந்தை சபி மூலம் அறிமுகமான கேரளாவை சேர்ந்த தரகர் தான், கல்லூரியில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு சிக்கலில் விட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு மாணவர்களிடமும் தலா 22 லட்சம் கமிஷன் பெற்றுக் கொண்ட தரகர் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு மர்ம நபர்கள் மிரட்டி வருவதாகவும், அதற்கான ஆடியோ ஆதாரத்தையும் சிபிசிஐடி அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். இந்த நால்வரை போல் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவர்களை குறி வைத்து மிக பெரிய மோசடி கும்பல் முறைக்கேடு செய்து சிக்க வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசாரணை நடந்து வரும் போதே, மாணவர்களை மிரட்டும் கும்பலை சிபிசிஐடி தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments