63 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : கைது செய்யப்பட்ட மருத்துவர் குற்றமற்றவர் என அறிக்கை

0 327

உத்தரபிரதேசம் அரசு மருத்துவமனையில், 63 குழந்தைகள் உயிரிழக்க காரணமானதாக கைது செய்யப்பட்ட மருத்துவர் ஹபீல் கான்  குற்றமற்றவர் என மாநில அரசின் விசாரணை குழு அறிக்கை அளித்துள்ளது.

கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவ கல்லூரியில், கடந்த 2017ம் ஆண்டு குழந்தைகளுக்கான மூளைக்காய்ச்சல் சிறப்பு வார்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு 63 குழந்தைகள் அடுத்தடுத்து இரு தினங்களில் உயிரிழந்தனர்.

இதற்கு மருத்துவமனையின் குழந்தை பராமரிப்பு பிரிவு மருத்துவர் ஹபீல் கான் தான் காரணம் என்றும், அவர் தான் நிலைமையை புரிந்து, சம்பந்தப்பட்ட அதிகரிகளுக்கு அறிவுறுத்தி, தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், குழந்தைகள் உயிரிழக்க ஹபீல் ஹானின் கவனக்குறைவு தான் காரணம் என்பதற்கு நேரடி ஆதாரங்கள் எதுவுமில்லை என கூறி, கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி வந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹிமான்ஷூ குமார் தலைமையிலான குழு, உத்தரபிரதேச அரசிடம் விசாரணை அறிக்கையை சமர்பித்தது.

அதில் ஹபீல் மூளைக்காய்ச்சல் வார்டு பிரிவு நோடல் அதிகாரி இல்லை எனவும், சம்பவம் நடந்த ஆகஸ்ட் மாதம் அவர் தனியார் மருத்துவமனைக்கு பயிற்சி பெற சென்றிருந்ததாகவும், எனவே குழந்தைகள் உயிரிழப்புக்கு அவரை பொறுப்பாக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 15 பக்க அறிக்கையானது நேற்று ஹபீல் கானிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹபீல் கான், உண்மையான குற்றவாளியை அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியாததால் தான் பலிகடாவானதாக தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments