நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் உதித் சூர்யா கைது

0 746

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாகக் கூறப்படும் மாணவர் உதித் சூர்யா, திருப்பதி மலை அடிவாரத்தில் அவரது குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார். 

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் தண்டையார் பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் உதித் சூர்யா. இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தார்.

கடந்த 13ஆம் தேதி அன்று அந்தக் கல்லூரி முதல்வரின் மின்னஞ்சல் முகவரிக்கு வந்த மின்னஞ்சலால் உதித் சூர்யா ஆள் மாறாட்டம் செய்த திடுக்கிடும் தகவல் அம்பலமானதாகக் கூறப்படுகிறது. நீட் தேர்வு ஹால் டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்பிட்ட போது, உதித் சூர்யாவுக்காக வேறொரு நபர் மும்பையில் நீட் தேர்வு எழுதியது உறுதி செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக கண்டமனூர் விலக்கு போலீசில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தாம் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன் ஜாமின் மனுத் தாக்கல் செய்த உதித் சூர்யா, தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டார். உதித் சூர்யாவைப் பிடிக்க ஆண்டிப்பட்டி காவல் ஆய்வாளர் உஷா ராணி தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், உதித் சூர்யாவைத் தேடி தனிப்படை போலீசார் சென்னை வந்தனர். தண்டையார்பேட்டையில் உள்ள வீடு பூட்டப்பட்டிருந்ததால், உதித் சூர்யாவையும், அவரது குடும்பத்தினரையும் தேடி வந்தனர். இந்த சூழலில் உதித் சூர்யாவின் செல்போன் சிக்னல் திருப்பதியை சுட்டிக் காட்டியதால், போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது திருப்பதி மலை அடிவாரத்தில் நின்று கொண்டிருந்த உதித் சூர்யாவையும் அவரது தந்தை வெங்கடேசன் மற்றும் தாயார் கயல் விழியையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள் மூன்று பேரும் சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். சென்னை அழைத்து வரப்பட்ட அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments