நீட் ஆள்மாறாட்ட வழக்கு - நேரில் ஆஜராக அறிவுரை

0 438

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் புகாருக்கு ஆளான மாணவர் உதித் சூர்யாவை சிபிசிஐடி போலீசாரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

ஆள்மாறாட்டம் செய்து நீட்தேர்வு எழுதி தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மாணவர் உதித் சூர்யா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது.

சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அதிகாரிகள் திருப்தியடைந்த பின்னரே கல்லூரியில் சேர்ந்ததாகவும் 20 வயதே ஆவதால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் உதித் சூர்யா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, நீட் தேர்வில் இது போல முறைகேடு நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டால் அது எளிதாக கடந்து செல்லக்கூடிய விஷயம் அல்ல எனத் தெரிவித்தார்.

வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். உணவு இடைவேளைக்குப் பின் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது உதித் சூர்யா மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வயதை கருத்தில் கொண்டு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் அரசுத் தரப்பில் வழக்குக்குத் தேவையான போதுமான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறிய நீதிபதி, மாணவர் உதித் சூர்யாவை சிபிசிஐடி முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அவ்வாறு ஆஜரானால் திங்கட்கிழமை வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு முன் ஜாமீன் வழக்கு ஜாமீன் வழக்காக மாற்றப்படும் என்றார். இதற்கு மனுதாரர் தரப்பில் சம்மதம் தெரிவிக்காததால் அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments