மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று இரவு 50,000 கன அடியாக அதிகரிக்கும் என தகவல்

0 481

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து நள்ளிரவில் 50 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கும் என மத்திய ஜலசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேட்டூர் அணை ஏற்கெனவே நிரம்பியிருக்கும் நிலையில், நீர்திறப்பு அதிகரிக்கப்படும் என்பதால் கரையோர மாவட்டங்களில் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு  நீர் வரத்து அதிகரித்து, கடந்த 7ஆம் தேதியன்று அணை நிரம்பியது. மொத்த நீர்தேக்கும்  உயரமான 120 அடியை எட்டியது.

பின்னர் நீர்வரத்து குறைந்ததையடுத்து15 நாட்களுக்கு பிறகு கடந்த 22-ம் தேதியன்று  நீர் மட்டம் 120 அடியிலிருந்து 119.94 அடியாகவும், நீர் இருப்பு 93.37 டி. எம்.சி. ஆகவும் குறைத்தது.

தற்போது கர்நாடகத்தில் மீண்டும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு   9 ஆயிரம் கன அடியிலிருந்து 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் மீண்டும்  120 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 93.47 டி.எம்.சி. ஆக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை மொத்த உயரமான 120.14 அடியை எட்டியது நடப்பாண்டில் இது இரண்டாவது முறையாகும்.

அணையிலிருந்து நீர் திறப்பு காலை 8 மணிக்கு வினாடிக்கு  8,000 கன அடியிலிருந்து 15,000 கன அடியாகவும், முற்பகல் 11.00 மணிக்கு 20,000 கன அடியாகவும், பிற்பகல் 1.30 மணிக்கு 27,500 அடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஈரோடு மாவட்டம் பவானி சுற்றுவட்டார பகுதியில் காவிரி கரையோர மக்களுக்கு வருவாய் துறை சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடபட்டு வருகிறது. நெருஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, குதிரைக்கல் பகுதி மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வெள்ளத்தின் முன் நின்று செல்பி எடுப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இதில் அணை, சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 20,000 கன அடியும், அணையின் 16 கண் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 7,500 கன அடியும் வெளியேற்றப் பட்டு வருகிறது.

மேலும் கிழக்கு மேற்கு கால்வாயில் வினாடிக்கு 600 கன அடி நீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. நீர் திறப்பு அதிகரிக்கப் பட்டுள்ளதால் அணை, சுரங்க மின் நிலையங்களில் அதன் முழுஅளவு உற்பத்தியான 250 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments