பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவை நடத்த அனுமதித்தது குறித்து சாய்ராம் கல்லூரிக்கு நோட்டீஸ்

0 740

பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவை நடத்த அனுமதித்தது குறித்து சாய்ராம் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க உள்ளதாக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கூறியுள்ளார். 

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது ஏராளமான ரசிகர்கள் திரண்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. விழா நடைபெறும் வளாகத்திற்குச் செல்லும் வாயிலில் நெருக்கடி ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.

இதனால் டிக்கெட்டுகளை வாங்கி இருந்த போதும், அவை பயனற்றுப் போனதால், கிழித்தெறிந்து ரசிகர்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.

கல்வி நிறுவனத்தில் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

சென்னை மாநிலக் கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு குறித்த கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள வந்த அவரிடம் செய்தியாளர்கள் பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழா குறித்த கேள்வியை எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அவர், தனியார் கல்லூரியில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், ஆனால் சாய்ராம் கல்லூரி அனுமதி பெறவில்லை என்றும் தெரிவித்தார். இதுதொடர்பாக விளக்கம் கேட்டு சாய்ராம் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments