உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக தமிழகத்தில் எத்தனை தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டன?

0 222

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் எத்தனை நிறுவனங்கள்  துவங்கப்பட்டன என்பது குறித்து அறிக்கை தாக்கல்  செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழக அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை கடந்த ஜனவரி மாதத்தில் இரண்டு நாட்கள் நடத்தி முடித்தது. முன்னதாக, இந்த மாநாட்டில் பங்கேற்கும் தனியார் நிறுவங்களின் விவரங்களை ஆராயும் வகையில் விதிகளை வகுக்க கோரி காஸ்கேட் என்ற நிறுவனம் சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

மேலும் அந்த மனுவில், 2015ஆம் ஆண்டு தமிழக அரசு நடந்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்குபெற்ற தனியார் நிறுவனங்களின் பின்னணியை ஆராயாததால், பல நிறுவனங்கள் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகவும், அதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

எனவே 2019ஆம் ஆண்டு மாநாட்டில் பங்கேற்கும் நிறுவனங்கள் பற்றிய தகவலை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விதிகளை உருவாக்க வேண்டும் என மனுவில் கேட்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் தொழில்களாக மாறி உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், முதலீட்டாளர் மாநாடு நடத்தி முடித்தது தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.சத்தியநாரயணன், என்.சேசஷாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், நடைபெற்று முடிந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்தில் எத்தனை தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் அதன் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்தும் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments