500 சவரன் கொள்ளையடித்த “பாக்ரி” கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

0 513

சென்னையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட பாக்ரி கொள்ளையர்களை 5 மணி நேரத்திற்குள் அடையாளம் கண்டு தனிப்படை போலீசார் பின் தொடர்ந்ததாகவும், சென்னையில் கடந்த 2017-ம் ஆண்டு 350 சவரன் கொள்ளையடித்த வழக்கு உட்பட சுமார் 500 சவரன் நகைகளை பாக்ரி கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியிருப்பதாக சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். 

கடந்த 20-ம் தேதி நங்கநல்லூரில் பட்டபகலில் ரமேஷ் என்பவர் வீட்டில் 120 சவரன் நகைகள் கொள்ளை போனதும், அதே நாளில் தாம்பரம் பகுதியில் 15 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது. இரண்டு சம்பவங்களிலும் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரே கும்பல் தான் என்பதை கண்டுபிடித்த போலீசார், ரயில் மூலம் தப்பிச் சென்ற கொள்ளையர்களை மத்திய பிரதேச போலீசார் உதவியுடன் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள 7 பேர் கொண்ட கும்பல் பாக்ரி இன கொள்ளையர்கள் எனவும், அவர்களின் குற்றப் பின்னணி என்ன? சில மணி நேரத்தில் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்தது எப்படியென சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கொள்ளை நடந்த அன்று 2.36 மணிக்கு நங்க நல்லூரில் கொள்ளை கும்பல் கொள்ளையடித்து விட்டு பழவந்தாங்கல் ரயில் நிலையம் வழியாக ரயில் ஏறி சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து, 5.10 மணிக்கு வெளி மாநிலம் தப்பி செல்ல முயன்றது சிசிடிவி மூலம் கண்டு பிடிக்கப்பட்டது. பின் ஜெய்ப்பூர் விரைவு ரயிலில் சென்று கொண்டிருந்த கொள்ளையர்களை பிடிக்க மத்திய பிரதேசம் நக்டா பகுதியில் உள்ள காவல் துறையினரை உஷார் படுத்தி ,கொள்ளையர்கள் 7பேரை மடக்கி பிடித்தனர்.

காவல் துறையினர் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 5 மணி நேரத்தில் கொள்ளையர்களை அடையாளம் கண்டு 24 மணி நேரத்தில் மடக்கிப் பிடித்துள்ளனர். பாக்ரி எனும் இனத்தைச் சேர்ந்த இந்த கொள்ளையர்கள் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மேர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கொள்ளையர்கள் மீது நாடு முழுவதும் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.

அஜ்மர் மாவட்டத்தில் மட்டும் 3 கிராமங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ள இந்த பாக்ரி இன கொள்ளையர்கள் பெரும்பாலும் திருட்டை மட்டுமே தொழிலாக கொண்டுள்ளனர் போலீசார் கூறுகின்றனர். ராஜஸ்தானில் இருக்கும் பவாரியா கொள்ளையர்கள், ஆட்கள் இருந்தாலும் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு கொள்ளையை நிகழ்த்துவார்கள்.

ஆனால் பாக்ரி கொள்ளையர்கள் ஆள் இல்லாததை நோட்டமிட்டு அறிந்து, வீட்டை பூட்டி விட்டு செல்லும் போது அரைமணி நேரத்தில் கொள்ளை அடித்துவிட்டு தப்பிக்க கூடியவர்கள் என இவர்கள் கைவரிசை காட்டும் விதம் குறித்து போலீசார் விளக்கினர்.

இதே, பாக்ரி கொள்ளையர்கள் தான் கடந்த 2017-ம் ஆண்டில் தாம்பரம் பகுதியில் ராமன் என்பவர் வீட்டில் 351 சவரன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றது என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த பகுதியில் சிசிடிவி இல்லாததாலும், போதுமான ஆதாரங்கள் கிடைக்காததாலும் இதுவரை சிக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில், தமிழகம் தான் அவர்கள் கொள்ளையடிக்க வளமான பகுதி என கருதியதால், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னை வந்த பாக்ரி கொள்ளையர்கள் 10 பேர் இங்கு முகாமிட்டுள்ளனர். கடந்த 18-ஆம் தேதி ஆதம்பாக்கத்தில் 10 சவரன், பின்னர், 20-ந் தேதி தாம்பரம் பகுதியில் 15 சவரன் கொள்ளையடித்துள்ளனர்.

அதே நாளில் நங்கநல்லூரில் 120 சவரன் நகை கிடைத்ததும் ரயில் ஏறி தப்பிச் சென்றனர். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் சென்னையில் குற்றவாளிகள் சிசிடிவி கண்களில் சிக்காமல் தப்ப முடியாது என்பதை அறியாத பாக்ரி கொள்ளையர்கள், சென்னை போலீசார் இங்கிருந்த படியே 24 மணி நேரத்திற்குள் மத்திய பிரதேச மாநிலம் நாக்டா ரயில் நிலையத்தில் வைத்த கண்ணியில் வசமாக சிக்கிக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments