உயிர்பலி வாங்கியுள்ள மண் கொள்ளை - கொதிக்கும் மக்கள்..!

0 425

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குடி மராமத்து பணிக்காக, குளங்களில்அள்ளப்படும் நூற்றுக்கணக்கான லாரி மண், சட்டவிரோதமாக உடன்குடி அனல் மின் நிலையம் மற்றும் துறைமுக ஒப்பந்த பணிகளுக்கு கொட்டப்பட்டு வந்த நிலையில் , லாரி மோதி இளைஞர் பலியானதால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர் அருகே உடன்குடி அனல்மின் நிலையம் மற்றும் துறைமுகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனல்மின்நிலையம் அமையும் பகுதி கடல் மட்டத்தை விட உயரம் குறைவாக இருப்பதால் அதனை உயர்த்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளுக்காக தேவைப்படும் மண் மற்றும் மணல் ஒப்பந்ததாரர்கள் மூலம் லாரிகளில் எடுத்துவரப்படுகிறது.

இதற்காக கானம் குளம், துலுக்கன் குளம், எல்லப்ப நாயக்கன் குளம் உள்ளிட்ட 13 குளங்களில் விவசாய பணிகளுக்கு என அனுமதிச்சீட்டு பெற்று விதி முறைகளை மீறி சட்டவிரோதமாக மண் அள்ளிச் செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.

இவ்வகைக் நீர்நிலைகளில் விவசாயிகளுக்கு விவசாயப் பணிக்கு என வண்டல் மண்ணை இலவசமாக அள்ளிக்கொள்ள அரசு அனுமதிக்கிறது. அதனை முறைகேடாகப் பயன்படுத்தி, நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் ஒப்பந்ததாரர்கள் மண் அள்ளிச் செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த மண் கொள்ளைக்கு என்று பிறமாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேர்பட்ட டாரஸ் லாரிகள் அந்தபகுதிகளில் இரவு பகலாக இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது

அந்த வகையில் நத்தகுளம் பகுதியில் இருந்து நாள்தோறும் இரவு பகலாக மண் அள்ளப்பட்டு வருகிறது. அங்கு வந்து செல்லும் லாரிகளுக்கு அனுமதிச்சீட்டு வழங்கும் பணியில் காணியாளர் புதூரைச் சேர்ந்த பாலசுந்தர் என்ற 17 வயது சிறுவன் ஈடுபட்டு வந்தார்.

திங்கட்கிழமை அதிகாலை லாரிகளுக்கு மணல் சீட்டு வழங்கியவர் உடல் அசதியில் குளத்தின் ஒரு ஓரத்தில் படுத்து உறங்கி உள்ளார். அப்போது மண் ஏற்றுவதற்காக வந்த லாரி ஒன்று பாலசுந்தரை கவனிக்காமல் அவர் மீது ஏறி இறங்கியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தகவலறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் சோனகன்விளையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். குளத்தில் தொடர்ந்து முறைகேடாக மண் அள்ளப்பட்டு வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

தகவலறிந்து போலீசாரும் அவர்களைத் தொடர்ந்து கோட்டாட்சியர் தனப்பிரியாவும் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து கோட்டாட்சியர் தனப்பிரியாவிடம் கேட்டபோது, அனல்மின் நிலைய பணிகளுக்கு மண் அள்ள அனுமதிக்கப்படவில்லை என்றும் அவ்வாறு மண் அள்ளுவோர் குறித்து புகார்கள் வருகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மண் வளத்தையும், நிலத்தடி நீர் வளத்தையும் காவு வாங்கி வந்த மண் கொள்ளை உயிர் பலியையும் வாங்கியுள்ளதாகக் கூறும் திருச்செந்தூர் மக்கள், மாவட்ட நிர்வாகம் இனியும் தாமதிக்காமல் கடுமையான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments