“வேண்டாம் இந்த ஆசிரியர்” - கொதிக்கும் பெற்றோர்..!

0 259

சிவகங்கையில் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் ஒருவர் மீண்டும் அதே பள்ளியில் பணியில் சேரவுள்ளதாக வந்த தகவலை அடுத்து, பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை ஏ.ஆர். குடியிருப்பு அருகே உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 155 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு நான்காம் வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் சபரிநாதன் சிவா. தன்னிடம் பயிலும் சிறுமிகளிடம் தவறான முறையில் நடந்துகொள்வது, பள்ளிக்கு குடித்து விட்டு வருவது, மாவா போன்ற போதைப் பொருளை எந்த நேரமும் வாய்க்குள் போட்டுக்கொண்டு வகுப்பறை அருகிலேயே உமிழ்வது என சபரிநாதன் சிவா மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை பெற்றோர் முன்வைக்கின்றனர்.

மாவட்ட கல்வி அலுவலர் சார்பில் மூவர் குழு அமைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில், சபரிநாதன் சிவா, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததாகவும் அதன் பின்னர் அவரை வேறு ஊருக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சபரிநாதன் சிவா மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றலாகி வருவதாக தகவல் கிடைத்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். தங்கள் பிள்ளைகளுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட பெற்றோர், ஆசிரியர் சபரிநாதன் சிவா மீண்டும் இதே பள்ளிக்கு வந்தால் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளிக்கு மாற்றிவிடுவோம் என ஆவேசப்பட்டனர். 

தகவலறிந்து பள்ளிக்கு வந்த போலீசாரும் மாவட்ட கல்வி அலுவலரும் பெற்றோரை சமாதானம் செய்தனர். சபரிநாதன் மீண்டும் அப்பள்ளியில் பணியில் இணையவுள்ளார் என்ற தகவல் பொய்யானது என மாவட்ட கல்வி அலுவலர் பாலமுத்து தெரிவித்தார்.

இருப்பினும் இத்தனை குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் ஆசிரியர் சபரிநாதன் சிவா மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் இடமாற்றம் செய்தது ஏன் என பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, மாவட்ட கல்வி அலுவலரிடம் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டறிந்ததாகவும் விரைவில் சபரிநாதன் சிவா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வியோடு சேர்த்து ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டிய மிக முக்கியமான இடத்தில் ஆசிரியர்கள் உள்ளனர். கற்கும் கல்வியையும் தாண்டி அந்த ஒழுக்கம் மட்டுமே சமூகத்தில் அவர்களை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும்.

அப்படிப்பட்ட ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய ஆசிரியர்களில் சபரிநாதன் சிவா போன்ற ஒருசிலர் செய்யும் தவறுகள் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்துக்கே இழுக்கை ஏற்படுத்தி விடுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments