பாதையை மீட்க தீக்குளித்த பெண்கள் ஒருவர் உயிரிழப்பு

0 416

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஊராட்சி நிர்வாகத்தால் தங்களது வீட்டுக்குச் செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்படுவதாகக் கூறி இரு பெண்கள் தீக்குளித்ததில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அல்லிநகரம் ஊராட்சிக்குட்பட்ட மேலஉசேன் நகரம் கிராமத்திலுள்ள சீமான் குளத்தின் கரை பகுதியில் 2 போர்வெல் அமைக்கப்பட்டு, சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. போர்வெல் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மோட்டார் ரூமும், மேல்நிலை நீர்தேக்க தொட்டியும், அதனை சுற்றி காம்பவுண்ட் சுவரும் ஊராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ளது.

காம்பவுண்ட் சுவரின் பின் பகுதியில் ராமதாஸ் - பூங்கொடி தம்பதியினர் மகன் குமரேசன், மருமகள் தங்கலட்சுமி மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். தங்களது வீட்டுக்குச் செல்லும் பாதையை ஆக்கிரமித்து ஊராட்சி நிர்வாகம் காம்பவுண்ட் சுவர் கட்டியுள்ளதாக ராமதாஸ் குடும்பத்தார் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கிலும் அவர்களது வீட்டுக்குச் செல்லும் பாதையை ஆக்கிரமிக்கக் கூடாது என்றும் பாதையை சீரமைத்துத் தர வேண்டும் என்றும் தீர்ப்பு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனை எதிர்த்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், போர்வெல்லில் ஒன்று பழுதாகியுள்ளது. இதனையடுத்து அங்கு புதிதாக போர்வெல் அமைத்து, மோட்டார் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது.

ஊராட்சி மன்ற ஊழியர்கள் இருவர் புதிய மோட்டாரை பொருத்திக் கொண்டிருந்தபோது, பூங்கொடியும் அவரது மருமகள் தங்கலட்சுமியும் உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டனர்.

படுகாயமடைந்த இருவரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருவரில் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்ட பூங்கொடி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி, ஊராட்சி செயலாளர் கலையரசி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் உட்பட 12 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments