மோடி நலமா நிகழ்ச்சி - விழாக் கோலம் பூண்டது ஹுஸ்டன்

0 724

அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் மோடி நலமா நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமைந்தது. இந்தியாவின் பன்முக கலாசாரம், அடையாளம் ஆகியவற்றின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் இந்த கலைநிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.

திரும்பிய பக்கமெல்லாம் இந்தியா வாழ்க, பிரதமர் மோடி வாழ்க என்ற கோஷத்தால் களைகட்டியிருந்தது, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஹுஸ்டன் நகரம். ஹுஸ்டன் நகர மக்களுக்கே, அது அமெரிக்கா, இந்தியாவா என்று சந்தேகம் எழும் அளவுக்கு அங்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் மோடி நலமா (howdy modi) நிகழ்ச்சிக்காக, ஹுஸ்டனின் என்ஆர்ஜி மைதானமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

இந்தியாவின் பன்முக கலாசாரம், அடையாளம் ஆகியவற்றின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் பரத நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டு, பாடல்களுக்கு ஏற்ப ஆடிப்பாடி அனைவரையும் அசத்தினர்.

கலைநிகழ்ச்சி ஒவ்வொன்றின் பின்னணியிலும் இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற தலங்கள், அமெரிக்காவின் புகழ்பெற்ற இடங்கள் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் கலைநிகழ்ச்சிகள், மேடைகளில் நடக்கும் உணர்வை அல்லாமல், உண்மையான இடங்களில் நடப்பது போன்ற உணர்வை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தியது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன், அமெரிக்க அதிபர் டிரம்பும் கலந்து கொள்கிறார். இந்திய வம்சாவளி மக்களிடையே மோடியை போல அதிபர் டிரம்பும் உரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க அதிபர் ஒருவர் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துவது இதுவே முதல்முறையாகும். இந்தியாவுடனான நட்புறவுக்கு அமெரிக்காவும், அந்நாட்டு அதிபர் டிரம்பும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதையே இது பிரதிபலிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments