120 சவரன் நகை, வைர நெக்லஸை திருடிய 6 பேர் கும்பல், ம.பி.யில் சிக்கியது..!

0 581

சென்னை நங்கநல்லூரில் தொழிலதிபர் வீட்டில், 120 சவரன் நகை, வைர நெக்லஸை திருடிய 10 பேர் கொண்ட வடமாநிலக் கும்பலை, மத்தியப்பிரதேசத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

சென்னை நங்கநல்லூர் எஸ்.பி.ஐ. காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ். திருப்பதியில் கிரானைட் ஏற்றுமதி தொழில் செய்து வரும் இவர் அண்மையில் சபரிமலை சென்றார். நேற்று முன் தினம், அவரது மனைவி கோமளவள்ளி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். பின்னர் அவரும் எழும்பூர் சென்று விட்டு இரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த கோமளவள்ளி, வீட்டில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை அறிந்து பழவந்தாங்கல் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

அந்த வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார், 120 சவரன் நகை, 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நெக்லஸ், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் திருடு போயிருப்பதை உறுதி செய்தனர். வீட்டிற்கு வெளியே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பலின் நடமாட்டம் பதிவாகி இருந்தது. கொள்ளையடித்த விதத்தை வைத்து பார்த்த போது, பவாரியா கும்பலாக இருக்கலாம் என்று கருதப்பட்டது.

இதனால் வழக்கில் பரபரப்பு தொற்றிக் கொள்ளவே 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. அந்தக் கும்பல் ஆட்டோவில் ஏறிச் செல்வது சிசிடிவி பதிவாகி இருக்கவே அதை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

ஆட்டோவில் ஏறிச் சென்ற கும்பல் , பழவந்தாங்கல் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து எழும்பூர் சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மத்தியப்பிரதேசத்திற்கு அவர்கள் புறப்பட்டது கண்டுபிடிக்கப்படவே அந்த மாநில போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றிரவு நகுடா ரயில் நிலையத்தில் வைத்து கொள்ளைக் கும்பலை உஜ்ஜைன் போலீசார் கைது செய்தனர்.

அவர்களைக் கைது செய்து சென்னை அழைத்து வருவதற்காக தனிப்படை அங்கு விரைந்துள்ளது. கைது செய்யப்பட்ட 10 பேரும் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 8 பேர் பாக்ரி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இருவர் குஜ்ஜார் இனத்தவர்கள் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

நங்கநல்லூரில் கொள்ளை அடிப்பதற்கு முன், தாம்பரம் சாய்நகரில் நடராஜ் என்ற மென்பொறியாளர் வீட்டில் 10 சவரன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்ததும் இதே கும்பல் தான் என்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் கம்லபட்டி, ராய்மால், ராம்நிவாஸ், ராம்டமுயா, கைலாஷ்பதி, காலுயேம், கோரு, காடு, சவன்ரியா, பப்லு (Kamlapati ,raimal,ramniwas,ramdamuya,kailashpati,kalueam,goru,kaadu,sawanriya,bablu) என்று போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments