மோடிக்கு முத்தம்...பாசத்தை பொழிந்த இந்தியர்கள்..!

0 943

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரைச் சென்றடைந்த பிரதமர் நரேந்திரமோடி, எரிசக்திதுறை சார்ந்த, ஒரு ட்ரில்லியன் டாலர் மூலதன மதிப்பு கொண்ட 17  நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களை சந்தித்தார். அமெரிக்காவில் இருந்து ஆண்டுக்கு 50 லட்சம் டன் திரவ இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்து கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 

7 நாள் அரசு முறைப் பயணமாக வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்கா புறப்பட்ட பிரதமர் மோடி, ஞாயிறன்று டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரைச் சென்றடைந்தார். அங்கு, அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

போஸ்ட் ஓக் நட்சத்திர விடுதிக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும், இந்திய வம்சாவளியினர் வரவேற்பு அளித்தனர். இதை அடுத்து, டெக்சாஸில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை மோடி சந்தித்தார். சீக்கியர்களைச் சந்தித்த மோடி அவர்களுடன் கலந்துரையாடியதுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர்கள் மோடியிடம் அளித்தனர்.

இதை அடுத்து போரா சமூகத்தினருடன் மோடி கலந்துரையாடினார். அப்போது மோடிக்கு அவர்கள் சால்வை அணிவித்தனர். பின்னர் காஷ்மீரி பண்டிதர்களை மோடி சந்தித்தார். அப்போது மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகக் காணப்பட்ட காஷ்மீரி பண்டிதர் ஒருவர், மோடியின் கையைப் பற்றிக் கொண்டு முத்தமிட்டார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு நீக்கத்தை தாங்கள் வரவேற்று அதற்கு வாழ்த்து தெரிவித்ததாக காஷ்மீரி பண்டிதர் சமுதாயத்தினர் கூறினர். அப்போது, தாங்கள் நிறைய இன்னல்களை அனுபவித்து விட்டதாகவும், அனைவரும் சேர்ந்து காஷ்மீரை முன்னேற்றலாம் என்று பிரதமர் மோடி கூறியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதைத் தொடர்ந்து உலகின் முன்னணி எரிசக்தி சார் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் உடனான வட்ட மேசை சந்திப்புக் கூட்டத்தில் மோடி பங்கேற்றார். ஏர் புரொடக்ட்ஸ், டெல்லுரியன், எக்சான் மொபில், பேகெர் ஹியூக்ஸ் ஆகிய 17 நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

71 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மூலதன மதிப்பு கொண்ட நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. அந்த நிறுவனங்களின் செயல்பாட்டை இந்தியாவில் ஊக்கப்படுத்தும் வகையில் ஆலோசனை நடைபெற்றது.

அப்போது, 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, ஆண்டுக்கு 500 கோடி கிலோ கிராம் திரவ இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதென அமெரிக்காவின் டெல்லுரியன் நிறுவனத்துடன் இந்தியாவின் பெட்ரோநெட் எல்.என்.ஜி. நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது.

எரிசக்தி துறை நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களுடன் நடந்த சந்திப்புக் கூட்டம் மிகவும் பயனுள்ள ஒன்று என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஹூஸ்டன் வந்து விட்டு, எரிசக்தி குறித்து பேசாமல் இருப்பது சாத்தியமில்லாதது என்றும் அவர் கூறியுள்ளார். எரிசக்தி துறையில் உள்ள வாய்ப்புகளுக்கு அஸ்திவாரம் போடும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஹவுடி மோடி என்ற சிறப்பு நிகழ்ச்சியில் மோடி பங்கேற்க உள்ளார். என்.ஆர்.ஜி கால்பந்து மைதானத்தில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் 50,000 பேர் கலந்து கொள்கின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் தோன்றுகிறார்.

இரு மிகப்பெரிய ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் ஒரே மேடையில் தோன்ற உள்ளது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும். இந்திய நேரப்படி, மாலை 6 மணி அளவில் ஹவுடி மோடி நிகழ்ச்சி தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 30 நிமிடங்கள் வரை இந்தியா குறித்து பேசக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments