குண்டும் குழியுமான சாலைகள் விமோசனம் எப்போது?
சென்னை போரூர்- குன்றத்தூர் சாலைப் பணிகள் மந்தமாக நடைபெறுவதாக குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், அப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையின் முக்கிய நுழைவு வாயிலாக விளங்குவது போரூர்-குன்றத்தூர் சாலை. குன்றத்தூர், நந்தம்பாக்கம், சோமங்கலம், சிறுகளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் இந்த சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு கோயம்பேட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட்டிற்கு குடிநீர் எடுத்துச்செல்லும் பணிக்காக இந்த சாலையின் ஒரு பகுதியில் பள்ளம் தோண்டி ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
அந்த பணிகள் முடிவடையாத நிலையில் தற்போது இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். சாலையில் ஜல்லிக் கற்கள் கொட்டிக் கிடப்பதால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஆங்காங்கே சறுக்கி விழுந்து செல்கின்றனர்.
போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுவதால் இந்த பாதையைத் தவிர்க்கும் வாகன ஓட்டிகள் போரூர், அய்யப்பன்தாங்கல், குமணன்சாவடி, மாங்காடு வழியாக சுற்றி செல்கின்றனர்.
மந்தகதியில் நடைபெறும் போரூர்- குன்றத்தூர் சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.
Comments