நாங்குனேரி - காங்கிரசுக்கே! "ஓகே" சொன்னது திமுக

0 345

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாங்குனேரி தொகுதியில் யார் போட்டியிடுவது என்கிற சர்ச்சை எழுந்த நிலையில் காங்கிரசுக்கே அந்தத்தொகுதியை திமுக ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் காலியாகவுள்ள நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்குனேரி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் கன்னியாகுமரி எம்பியாகிவிட்டதையடுத்து தொகுதி காலியானது.

இந்நிலையில் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட வேண்டும் என்று இளைஞரணி செயலாளர் உதயநிதி திமுகதலைவர் ஸ்டாலின் முன்னிலையிலேயே தெரிவித்தார். இதற்கிடையே நெல்லை மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில், காங்கிரசுக்குதான் நாங்குனேரி தொகுதியை ஒதுக்க வேண்டும், இல்லையெனில் தனித்து போட்டியிடலாம் என்று கருத்துகள் வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.நாங்குநேரி தொகுதி யாருக்கு என்பதை அறிவிக்காமல் திமுகவும் மவுனம் காத்து வந்தது.

தற்போது தேர்தல்,அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, இடைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றார். நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் ஒதுக்கப்படுவதாக வும் புதுச்சேரியில் இடைத் தேர்தல் நடைபெறும் காமராஜ் நகர் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, நாங்குநேரி தொகுதிக்கு நாளை மறுநாள் முதல் விருப்பமனுக்களை காங்கிரஸ் கட்சி பெற உள்ளதாக தெரிவித்தார்.

நாங்குநேரி தொகுதியில் 1977 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்தல்களில், ஜனதா கட்சி, சமத்துவமக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தலா ஒரு முறையும், காங்கிரஸ் கட்சி இரண்டு முறையும், அதிமுக 4 முறையும், திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments