விடிய விடிய பப்ஜி விளையாண்ட மாணவர்கள் மிஸ்சிங்..!

0 809

கோவை சூலூரில் விடிய விடிய வீட்டில் அமர்ந்து பப்ஜி விளையாடிய மாணவர்கள் இருவர் வீட்டில் இருந்து மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விமானப்படை வீரர்களின் வாரிசுகள் பப்ஜிக்கு அடிமையானதால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் உதவி விங் கமாண்டர் பொறுப்பில் உள்ள விவேக் சிங்கும், பல்தேவும் நண்பர்கள். இருவரது குடும்பத்தினரும் சூலூர் விமான தள விடுதியில் அருகருகே உள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

பல்தேவ் மகன் வருண் சிங் ரத்தோர், விவேக் சிங் மகன் கீத்லு பல்தேவ் தத்தானியா ஆகிய இருவரும் அருகில் உள்ள விமானப்படை பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். வீட்டில் எப்போதும் கையில் ஸ்மார்ட் போனில் பப்ஜி விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான இருவரும் விடிய விடிய பப்ஜி விளையாடும் அளவுக்கு தீவிரம் காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் வியாழக்கிழமை பள்ளிக்கு சென்ற மாணவர்கள் இருவரும் மாயமாகினர். இது குறித்து பள்ளியில் விசாரித்த போது அவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. பப்ஜி விளையடிய மாணவர்களை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் வியாழக்கிழமை காலையில் சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்ட நண்பர்கள் இருவரும் பள்ளிக்குள் செல்லாமல், வெளியே சென்று விட்டது அங்குள்ள ஒரு கேமராவில் பதிவாகி இருந்தது.

மாணவன் வருண் சிங் ரத்தோர் தனது வீட்டில் இருந்து 4,000 ரூபாய் மற்றும் சில உடமைகளையும் எடுத்துச் சென்றுள்ளான். இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் சூலூர் போலீசார் இரு மாணவர்களையும் தேடிவருகிறார்கள். மாயமான இருவரும் சூலூர் மற்றும் காங்கேயம்பாளையம் பகுதியில் உள்ள சைக்கிள் கடைகளுக்கு சென்று சைக்கிள் செயினை சரி செய்து விட்டு சென்று இருப்பது தெரியவந்துள்ளது.

விமானப்படை வீரர்கள் தங்கள் அலுவலக அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒத்துழைப்புடன் மாயமான தங்கள் மகன்களை ஊர் ஊராக தேடி வரும் நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் காணாமல் போன இரு மாணவர்களும் மீண்டும் பாப்ஜி விளையாட்டை லாகின் செய்து விளையாடி வருவதை கண்டு பிடித்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் கோவைக்குள் எங்காவது சுற்றிதிரியலாம் என்றும் தனிமையான இடத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடி கொண்டிருக்கலாம் என்று தெரிவித்த காவல்துறையினர், மாயமான மாணவர்களின் புகைபடத்தை வெளியிட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். பப்ஜி விளையாட்டில் நேரம் செல்லச் செல்ல, விளையாடுபவரின் மேப் சிறிதாகிக் கொண்டே சென்று, அடுத்த இடத்திற்கு வெளியேறச் சொல்லி உத்தரவிடும்.

அதனை செய்யாவிட்டால் இறுதியில் கேம் ஓவர் என்றும் கூறப்படுகிறது. மேலும், போகிமான் என்ற கேமில், எதிரி ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒளிந்திருந்தால் அந்த பகுதியை நோக்கிச் சென்ற பின்னரே கேமை மேலும் தொடரமுடியும் என்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அந்த வகையிலும் இருவரும் வேறு இடங்களுக்கு சென்றுள்ளனரா என விசாரணை நடைபெற்று வருகிறது.

செல்போனில் உள்ள விளையாட்டுக்கள் சிறுவர்களை அடிமைப்படுத்தி கண்களின் பார்வைத்திறனை இழக்க செய்யும் என்பதால் பெற்றோர் கூடுமானவரை படிக்கின்ற குழந்தைகளுக்கு செல்போன்களை கொடுப்பதை தவிர்ப்பதே நலம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments