முகநூலில் திருடப்பட்ட மாணவிகள் புகைப்படம்..! ஆபாசமாக சித்தரிப்பு

0 418

முகநூலில் பதிவிடப்பட்ட கல்லூரி மாணவிகளின் செல்பி புகைபடங்கள், ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இணையத்தில் பரப்பப்படுவதாக புகார் எழுந்து உள்ளது. கல்லூரி விழாவில் தோழிகளுடன் எடுக்கப்பட்ட செல்பி புகைபடங்கள் ஆபாசமான பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு முடித்த மாணவிகளுக்கு பிரிவு உபச்சார விழா நடந்துள்ளது.

அந்த விழாவில் 10 மாணவிகள் ஒன்றாக சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர். அதை ஒரு மாணவி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் அமெரிக்க இணையதளம் ஒன்றில் அந்த மாணவிகளின் புகைபடங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு உலா வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி ஒருவர் சக மாணவிகளுக்கும் தெரிவித்துள்ளார்.

அந்த குறிப்பிட்ட ஆபாச இணைய தளங்களில் சம்பந்தப்பட்ட மாணவிகளை ஆபாசமாக சித்தரித்து பாலியல் தொழில் செய்வதாக குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் 10 பேரும் சேர்ந்து கல்லூரியின் முதல்வரிடம் இது குறித்து முறையிட்டுள்ளனர். இதையடுத்து கல்லூரி முதல்வர் பூக்கடை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அமெரிக்காவில் இருந்து செயல்படும் ஆபாச இணைய தளமொன்றில் இந்த படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சைபர் கிரைம் பிரிவுக்கு போலீசார் மாற்றியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து செயல்பட்ட நூற்றுக்கணக்கான ஆபாச இணைய தளங்களை முடக்கி காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தாலும், வெளிநாடுகளில் சர்வர்களை கொண்ட புதிய புதிய ஆபாச இணைய தளங்கள் எளிதாக மொபைலில் காணக்கிடைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முகநூலில் இருந்து திருடப்படும் அழகான பெண்களின் புகைபடங்களை ஆடையில்லா பெண்ணின் உடலோடு ஒட்டி மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவது நீண்ட காலமாக தொடர்ந்தாலும் அண்மையில் ஆபாச இணையதளங்களை முடக்கிய பின்னர் குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகளை குறிவைத்து இந்த மார்பிங் கும்பல் கைவரிசை காட்டி வருவதால் பெண்கள் முன் எச்சரிக்கையுடன் தங்கள் புகைபடங்களை முகநூலில் இருந்து அகற்றி விடுவது நல்லது என்கின்றனர் காவல்துறையினர்.

ஸ்மார்ட் போனிலேயே புகைபடங்களில் உள்ள பெண்களின் முகங்களை வெட்டி ஓட்டி மார்பிங் செய்வதற்கு ஏராளமான செயலிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளதால் அவர்களுக்கு முக நூலில் நட்பாக உள்ள ஆண் நண்பர்கள் கூட அந்த பெண்களின் படங்களை இது போல மார்பிங் செய்து வெளி நாட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்காலாம் என்று சந்தேகிக்கும் காவல்துறையினர் அது குறித்தும் விரிவான விசரணையை முன்னெடுத்துள்ளனர்.

முகநூலில் கணக்காளர்கள் பதிவிடும் தகவல்கள், புகைபடங்கள் திருடப்படுவதாக நீண்ட காலமாக புகார் இருக்கும் நிலையில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இளம் பெண்கள் தங்கள் புகைபடங்களை பகிர்வதை கூடுமானவரை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர் காவல்துறையினர். இருந்தாலும் அமெரிக்காவில் இருந்து செயல்படுவதாக கூறப்படும் இந்த இணையதளத்தை முடக்கும் நடவடிக்கையில் சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டிவருகின்றனர்.

வரும் முன் காப்பதே சிறந்தது வந்த பின் நொந்து கொள்வதால் பயனில்லை என்பதை நமது பெண்கள் உணரவேண்டும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments