கோட் சூட் போட்டு 100 கோடி சுருட்டல்..! சதுரங்க வேட்டை -3

0 718

சென்னை வளசரவாக்கத்தில் வின்ஸ்டார் என்ற பெயரில் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக சதுரங்கவேட்டை பட பாணியில் ஆசைவார்த்தை கூறி 100 கோடி ரூபாய் சுருட்டியதாக புகார் எழுந்துள்ளது

சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல பணம் சம்பாதிக்க எளிய வழி சொல்லிக்கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறி, மெகா மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் வின்ஸ்டார் ஏழுமலை.

சென்னை வளசரவாக்கத்தில் வின்ஸ்டார் என்ற பெயரில் மார்கெட்டிங் நிறுவனம் நடத்திய ஏழுமலை - சித்ரா தம்பதியர் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 100 வங்கி வேலை நாட்களில் பணத்தை இரட்டிப்பாக வாடிக்கையாளர் வங்கி கணக்கில் செலுத்துவதாக ஆசைவார்த்தை கூறி உள்ளனர்.

கோட் சூட் போட்ட 30 முகவர்களை நியமித்து ஏராளமானவர்களிடம் ஆசையை தூண்டி தங்கள் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தனர்.

பலர் லட்சக்கணக்கில் இவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்தவாரம் ஏழுமலை சித்ரா தம்பதி நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டது. தலையில் விக் வைத்துக் கொண்டு கோட் சூட் போட்ட முகவர்களும் வாங்கிய பணத்துக்கு பதில் சொல்லாமல் கைவிரித்துவிட்டனர்.

பலர் தங்களிடம் உள்ள கருப்புபணத்தை இந்த மோசடி கும்பலிடம் முதலீடு செய்துள்ளதால் காவல்துறையில் புகார் அளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். தாங்கள் சேமித்து வைத்திருந்த பணம் இரட்டிப்பாகும் என்று நம்பி பணம் செலுத்தியவர்கள் வாழ்க்கையே இருண்டு போனதாக புலம்பி வருகின்றனர்.

ஏழுமலை கடந்த சில மாதங்களில் மட்டும் 100 கோடி ரூபாய் அளவிற்கு பணம் சுருட்டி உள்ளதாக குற்றஞ்சாட்டும் பாதிக்கப்பட்டவர்கள், முகவர்களாக செயல்பட்ட 30 பேரும் பல கோடிகளை தங்கள் பங்கிற்கு எடுத்துக் கொண்டதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் புகார் ஏற்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

25 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட மோசடி புகார்களை உள்ளூர் காவல் நிலையங்கள் விசாரிப்பதில்லை, சென்னை காவல் ஆணையரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மத்திய குற்றபிரிவோ அல்லது பொருளாதார குற்றபிரிவு காவல்துறையினரோ தான் விசாரிக்க இயலும் என்பதால் காவல்துறையினர் புகாரை விசாரிக்க மறுத்ததாக கூறப்படும் நிலையில், காவல்துறையில் புகார் அளித்தால் பணம் திரும்ப கிடைக்காது என்று சில முகவர்கள் முதலீட்டாளர்களை ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது.

போலீசில் புகார் அளித்தால் சிறிது காலம் கழித்தாவது ஏமாற்றப்பட்ட பணம் கிடைக்க வழி உண்டு, மோசடி நபர்களின் ஆசை வார்த்தையை மீண்டும் நம்பினால் எபோதுமே பணம் கிடைக்காது என்பதை உணர்ந்தாவது பணத்தை பறிகொடுத்தவர்கள் ஒன்று கூடி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிப்பது நலம் என்கின்றனர் காவல்துறையினர்.

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் உணர்ந்து சொன்னதை குறைந்தபட்சம் காதில் போட்டுக் கொண்டாலாவது வரும்காலங்களில் இது போன்ற மோசடி கும்பலிடம் மக்கள் ஏமாறாமல் இருக்கலாம்..!

ஒருத்தன் திருடனாக இருந்தால் தப்பி விடலாம், மொத்த பேரும் திருடனாக உள்ள நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சான்று..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments