கோவாவில் இன்று நடைபெறுகிறது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்

0 285

கோவாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் ஆட்டோமொபைல் துறைக்கு வரிச்சலுகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 37வது கூட்டம் இன்று கோவாவில் நடைபெறுகிறது. பல்வேறு துறைகள் வரியைக் குறைக்கவும் சலுகைகளை எதிர்பார்த்தும் மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றன. குறிப்பாக மோட்டார் வாகனங்கள் உற்பத்தி மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு துறை 28 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பு காரணமாக கடும் வர்த்தக சரிவை சந்தித்து வருகிறது. கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை முன்எப்போதும் இல்லாத விதத்தில் சரிந்துள்ளது.

அதனால் பல்வேறு முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தி வைக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளன. இத்துறையினர் வரியை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இன்றைய கூட்டத்தில் இக்கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர சிறு தொழில்களுக்கான ஜிஎஸ்டி படிவம் 9 தாக்கல் செய்யும் முறையிலும் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது.

ஆண்டுக்கு 2 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் சிறிய நிறுவனங்கள் ஆண்டுமுடிவில் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் சிறுவியாபாரிகளை விடுத்து பெரிய கணக்கு வழக்குகளில் அதிகாரிகள் கவனம் செலுத்த முடியும் என்றும் கருதப்படுகிறது.

இதனிடையே ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க கோவா சென்ற அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் மேலும் 37 பொருட்களுக்கு வரி குறைக்கும்படி வலியுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments