முதலீட்டாளர்களுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்குதலை துரிதப்படுத்த குழு

0 287

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்குதலை துரிதப்படுத்தவும், வசதிகளை மேம்படுத்தவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உயர்நிலை அதிகாரக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் மூலம், 8,835 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கு, 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முதலீடுகளை உறுதி செய்யும் வகையில், அனுமதி வழங்குதலை துரிதப்படுத்த முதலமைச்சர் தலைமையிலான குழுவில், துணை முதலமைச்சர், மின்துறை, ஊரக வளர்ச்சித்துறை, உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைமைச் செயலாளர், தொடர்புடைய துறைகளின் செயலாளர்களும் இந்த குழுவின் உறுப்பினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீடுகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் ஒற்றைச் சாளர முறையில் பெறப்பட்டு நிலுவையில் உள்ள அனுமதிகள் மற்றும் மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு குழுமத்தால் வழங்கப்படும் சுற்றுச்சூழல் அனுமதி போன்ற பிற அனுமதிகளை துரிதப்படுத்துவதற்காக பிரதி மாதம் முதல் வாரத்தில் இந்த குழு கூடும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பெரும் முதலீட்டாளர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்காகவும், தொழில் முதலீடுகளை துரிதப்படுத்துவதற்காகவும் இந்திய ஆட்சி பணி அலுவலர் நிலையில் ஒரு அலுவலரை சிறப்புப் பணி அலுவலராகக்கொண்டு முதலீடுகளை எளிதாக்கும் பிரிவு ஒன்று முதலமைச்சர் அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments