ஆள் மாறாட்ட விவகாரம் - டாக்டர் குடும்பம் தலைமறைவு

0 604

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் அரசு மருத்துவர் வெங்கடேசன், மாணவன் உதித்சூர்யாவுடன் குடும்பத்தோடு தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கடேசனின் செல்போன் எண்ணை வைத்து தனிப்படை காவல்துறையினர் மாணவன் உள்பட மருத்துவர் குடும்பத்தினரை தேடி வருகின்றனர். இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. 

சென்னை தண்டையார்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடேசன். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மகனான உதித்சூர்யா, ஆதி திராவிடர் ஒதுக்கீட்டில் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவப்படிப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 9ம் தேதி தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு மின்னஞ்சல் மூலம் அசோக் என்பவர் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் நீட் தேர்வு எழுதிய நபர் ஒருவர் என்றும், தற்போது மருத்துவப்படிப்பு மேற்கொண்டு வருவது வேறொரு நபர் என்றும், புகைப்பட ஆதாரத்துடன் மின்னஞ்சலில் புகார் அளித்திருந்தார். இது குறித்து தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் 4 மருத்துவர்கள் கொண்ட குழு விசாரணைக்கு அமைக்கப்பட்டது.

விசாரணையில் மருத்துவப்படிப்பில் பயின்று வருபவரின் புகைப்படமும் தேர்வு எழுதிய மாணவனின் புகைப்படமும் வேறு வேறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மும்பையில் நீட் தேர்வு எழுதிய மாணவனின் புகைப்படம், சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கலந்தாய்வுக்குச் சென்றவரின் புகைப்படம், ஒரே மாணவனுடையது.

ஆனால் மருத்துவ கல்லூரியில் பாடம் படிக்கச் சென்றதோ அரசு மருத்துவர் வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா என்பது விசாரணையில் அம்பலமானது. நண்பன் திரைப்பட பாணியில் எஸ்.ஜே சூர்யாவுக்கு பதில் நடிகர் விஜய் கல்லூரியில் பயின்றது போன்றே விஸ்வரூபம் எடுத்திருக்கிறது இந்த ஆள்மாறாட்ட விவகாரம்.

இதையடுத்து மருத்துவ கல்வி இயக்குநகரத்தின் ஆய்வறிக்கையை பெற்று மருத்துவ கல்லூரி நிர்வாகம் தேனி கானாகாவல் நிலையத்தில் ஆள்மாறாட்டம் தொடர்பாக புகார் அளித்தது. இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

தேனி மாவட்ட காவல் அதிகாரிகள் சென்னை தண்டையார்பேட்டைக்கு விரைந்து மாணவனின் வீட்டில் சோதனை நடத்த முயன்றனர். ஆனால் போலீசிடம் சிக்காமல் மருத்துவர் வெங்கடேசன் மாணவன் உதித்சூர்யாவுடன் குடும்பத்தோடு தலைமறைவானார். இதையடுத்து காவல்துறையினர் மாணவன் வசித்து வந்த வீட்டின் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். வீட்டிற்கு முன்பு இருந்த தபால் பெட்டியிலும் சோதனை நடத்தப்பட்டது.

கடந்த 3 நாட்களாகவே வீடு பூட்டபப்ட்டிருப்பதாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி தலைமறைவான அரசு மருத்துவர் வெங்கடேசனின் செல்போனை எண்ணைக் கொண்டு தனிப்படை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் தேர்வு எழுதிய நபர் யார்? மின்னஞ்சல் மூலம் உதித்சூர்யா மீது புகார் அளித்தது யார்?, ஆள்மாற்றாட்ட மோசடிக்கு உடந்தையாக இருந்தது யார்? நீட் தேர்வு எழுதுவதற்கு லட்சக்கணக்கில் பணம் கைமாறியதா? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதனிடையே மருத்துவக்கல்வி இயக்குநரகம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில் 2019 - 2020ம் ஆண்டு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் நீட் தேர்வு புகைப்படம், கலந்தாய்வு புகைப்படம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து உடனடியாக ஆய்வறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரியின் துணை முதல்வர், துறை தலைவர் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு மூலம் ஒவ்வொரு மாணவர்களின் புடைப்படம் குறித்தும் தனித்தனியாக ஆய்வு நடத்த வேண்டும் என்றும் விடுப்பில் உள்ள மாணவர்களை கல்லூரிக்கு வரவழைத்து புகைப்படங்களை சோதனை நடத்தவும் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்ததாக உதித் சூர்யா என்ற மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு புதிதாகச் சேர்ந்து பயின்று வரும் மற்ற மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது.

இந்த வழக்கு போலீசாரிடம் இருந்து சிபிசிஐடி போலீசார் வசம் மாற்றம் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரியில் புதிதாககச் சேர்ந்த 100 மாணவர்களின் சான்றிதழ்களையும் சரிபார்க்கும் பணியை விசாரணை குழு தொடங்கியுள்ளது.

சரிபார்க்கும் பணியில் மாணவர்களின் புகைப்படம் சான்றிதழில் உள்ள புகைப்படங்களுடன் ஒத்துப்போகிறதா என ஆய்வு செய்யப்படும். இதனிடையே உதித் சூர்யா குறித்து புகார் வந்த மின்னஞ்சல் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளது என்றும் அதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. 

நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசுதான் நடத்துவதாகவும், ஆள்மாறாட்டம் குறித்து தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றப் பின் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ஆள்மாறாட்டம் நடந்துள்ளதாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி டீனுக்கு இமெயில் வந்ததாகவும் அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட மாணவனிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் அமைச்சர் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments